சர்க்கரை என்ற ஒன்று இப்போது எல்லா பொருட்களிலுமே கலக்கப்படுகிறது. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடுவதால் பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக விரைவாக வயதான தோற்றம் வந்துவிடும் என்கின்றனர். அதிகப்படியான சர்க்கரையால் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை சாப்பிடுவது என்றதும் நேரடியாக சர்க்கரையை அப்படியே சாப்பிடுவது என நினைக்க வேண்டாம். சர்க்கரை கலக்கப்பட்ட எந்த உணவை சாப்பிட்டாலும் அது சர்க்கரையை சாப்பிடுவதற்கு சமமே. சர்க்கரையில் அதிக கலோரி இருப்பதால் இது உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும். எனவே சர்க்கரை நமது உடல் நலத்திற்கு கொஞ்சம் கூட நல்லதல்ல.
சிலர் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், தேன், நாட்டு சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது என்று கூறினாலும், அதிலும் மிகுதியாக இருப்பது சர்க்கரை அளவுதான். ஆனால் வெள்ளை சர்க்கரையை விட இவற்றில் சில நன்மைகள் உள்ளன. எனவே வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்? ஒவ்வொரு தனிநபரும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 கிராம் வரை சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சாப்பிடுவது உங்களுக்கு நல்லதல்ல. சர்க்கரை உணவுகளை சாப்பிடும்போது நன்றாக இருந்தாலும் அது ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக சர்க்கரையால் வாய் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் அதிகப்படியான சர்க்கரையால் உயர் ரத்த அழுத்தம், உடல் வீக்கம் போன்ற பாதிப்புகள் வரலாம். இதனால் இதய நோயின் அபாயம் அதிகரிக்கிறது.
சரி அப்படியானால் நாங்கள் இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாதா? என கேட்பவர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். அவற்றுக்கு பதிலாக இயற்கை இனிப்பு அடங்கிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ச்சியாக அதிக சர்க்கரையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். குறிப்பாக 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் சர்க்கரை உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றை உங்களால் தவிர்க்க முடியாது. ஒரு பயங்கரமான போதை போல மாறிவிடும். எனவே இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அதிக இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள். இது உங்கள் உடல் நலத்திற்கு பெரிதளவில் நன்மை புரியும்.