

உங்கள் இதயம் எவ்வித கோளாறுமின்றி நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை, வீட்டில் இருந்தபடியே கூறமுடியும் (signs of a healthy heart). அது எவ்வாறென்பதை இப்போது பார்க்கலாம்.
1. பொதுவாக, அமைதியான ஓர் இதயம் ஆரோக்கியமானது. சும்மா இருக்கும்போது உங்களின் இதயத்துடிப்பு 60-80 bpm இருக்குமானால் உங்கள் இதயம் சிறந்த முறையில் சிரமமில்லாமல் இரத்தத்தை பம்ப் செய்கிறது என்று அர்த்தம். இதற்கு உங்கள் இரண்டு விரல்களை மணிக்கட்டில் அல்லது கழுத்தருகில் வைத்து 30 செகண்ட்ஸ் துடிப்பதை எண்ணி அந்த நம்பரை இரண்டால் பெருக்க அது 60-80 க்குள் இருக்க வேண்டும். இதயத்துடிப்பு தொடர்ந்து எண்பதுக்கு மேல் இருந்தாலோ அல்லது அடிக்கடி நார்மலுக்கு மேலேயோ அல்லது கீழேயோ சென்று கொண்டிருந்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
2. ஒரு மாடி உயரம் படிக்கட்டுகளில் ஏறும்போது, உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏதுமில்லாமலும், உங்கள் இதயப் பகுதியில் இறுக்கமாக உணராமலும், அதிக சோர்வு உண்டாகமலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருப்பதையும், உங்கள் தசைகள் அனைத்திற்கும் ஆக்ஸிஜன் குறைவில்லாமல் கிடைப்பதையும் அது காட்டுவதாக பொருள் கொள்ளலாம். மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் போன்ற உணர்வு இருக்குமாயின் டாக்டரை உடனடியாக பார்ப்பது அவசியம்.
3. உங்கள் இரத்த அழுத்தம் 120/80 mmHg இருக்குமானால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதென்று அர்த்தம். இரத்த அழுத்தம் இந்த அளவுக்கு மேல் அதிகம் ஆனால், அறிகுறியின்றி இரத்த நாளங்களில் பாதிப்பை உண்டுபண்ணி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தை உண்டுபண்ணும். எனவே, டிஜிட்டல் பிளட் பிரஷர் மானிட்டர் உதவியால் அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து இரத்த அழுத்தம் நார்மலுக்கு வராமல் அதிகமாக இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது நலம்.
4. ஆரோக்கியமான இதயம், அனைத்து உறுப்புகளுக்கும் குறைவின்றி இரத்தத்தைப் பம்ப் செய்து அனுப்பிக் கொண்டிருக்கும். இதயத்தின் ஆரோக்கியம் கெடும்போது அதன் முதல் அறிகுறியாக பாதம் மற்றும் கணுக் காலில் நீர்க் கோர்த்து வீக்கம் தென்படும். தினமும் உங்கள் கால்களைப் பரிசோதித்து, வீக்கம் இருந்தால் டாக்டரை சந்தித்து மருத்துவ ஆலோசனைபெறுவது நலம்.
5.தூக்கத்தில் இடையூறு, தூங்கும்போது அல்லது தூங்கி எழும்போது மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சத்தமாக குறட்டை விடுதல் போன்ற கோளாறுகள் இதய ஆரோக்கியம் குன்றியிருப்பதின் அறிகுறியாகும். தினமும் இடையூறில்லாத ஆழ்ந்த உறக்கம் பெறுவது இதயத்திற்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதையும் இதயம் ஆரோக்கியமாக உள்ளதையும் உறுதிப்படுத்தும்.
6. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்போது உடல் முழுவதிற்கும் ஆக்ஸிஜனும் ஊட்டச் சத்துக்களும் குறைவின்றிக் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் வேலை செய்வதற்கான சக்தி உடலுக்குக் கிடைக்கும்.
7. கொலஸ்ட்ரால் அளவு நார்மலாகவும் இரத்த சர்க்கரை அளவு சமநிலையிலும் இருக்கும்போது இரத்த நாளங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகாமலும், சுருங்கி விடாமலும் பாதுகாக்கப்படும். வீட்டிலேயே போர்ட்டபிள் குளுக்கோ மீட்டர் மூலம் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வதும், வருடம் ஒருமுறை கொலஸ்ட்ரால் டெஸ்ட் பண்ணிக்கொள்வதும் இதய ஆரோக்கியம் காக்க உதவும்.