அமைதியற்ற கால் நோய்க்குறியை (RLS) எதிர்கொள்ளும் விதம்!

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்https://thewell.northwell.edu
Published on

‘அமைதியற்ற கால் நோய்க்குறி’ என்ற ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பு மண்டலக் கோளாறு ஆகும். பொதுவாக, மாலை அல்லது இரவு நேரங்களில் உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்துக்கொள்ளும்போது கால்களை நகர்த்துவதும் அசைப்பதும் ஒரு குறுகிய காலத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

அமைதியற்ற கால் நோய்க்குறியின் முக்கிய அம்சங்கள்:

காரணங்கள்: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பாக, ஆண்களை விட பெண்களுக்கு இந்நோய் அதிகம் தாக்கும் அபாயம் உண்டு. இரவில் தாமதமாக தூங்குவது, இரவு நேர ஷிப்ட் வேலை, தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்ற தூக்கக் கோளாறுகள், அதிகப்படியான ஆல்கஹால் அல்லது காஃபின் நுகர்வு மற்றும் புகை பிடித்தல், ஆன்ட்டி ஸ்டிராய்டு போன்ற மருந்துகளின் ஒவ்வாமை போன்றவை இதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன.

பாதிப்புகள்: இரும்புச்சத்துக் குறைபாடு, சிறுநீரக செயல்பாடு குறைதல், சிறுநீரக நோய்கள், மனச்சோர்வு, நீரிழிவு நோய், முடக்குவாதம் அல்லது குறைந்த அளவு தைராய்டு, பார்க்கின்சன் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

RLS குறைபாட்டின் அறிகுறிகள்:

கால்களில் கூச்ச உணர்வு, அரிப்பு, கால் எரிச்சல், மின்சார அதிர்ச்சி போன்ற வலி போன்ற விசித்திரமான உணர்வுகள் ஏற்படும். மேலும், கைகள், கழுத்து, தோள்பட்டை மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் இருக்கலாம். ஒரு பக்கத்தில் வலி தொடங்கி மறுபுறம் பரவலாம். இந்த அறிகுறிகள் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் இருக்கும். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது, குறிப்பாக விமானம் அல்லது கார் பயணம், திரையரங்கில் அமர்ந்திருக்கும் சமயங்களில் இது நிகழலாம்.

இதனால் கைகள், கால்களை அசைப்பது அல்லது நகர்த்துவதற்கும், படிக்கட்டில் ஏறுவதும் சிரமமாக இருக்கும். இதனால் இந்த நபர் தூங்குவதற்கு அதிக நேரம் எடுக்கலாம். இந்த நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அடிக்கடி எரிச்சல்படுவது, சுறுசுறுப்பின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவற்றை எதிர்கொள்வர்.

வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை சரி செய்வதற்கான வழிமுறைகள்:

மது அருந்துதல், காஃபின் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் தளர்வு நுட்பங்களை முயற்சிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குணாதிசயங்களை மற்றவர்க்குக் காட்டும் சின்னச் சின்ன நடவடிக்கைகள்!
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்

இரவு நேர தூக்கத்திற்குத் தேவையானவற்றை செய்ய வேண்டும். இரவில் மொபைல், டிவி பார்ப்பது போன்றவற்றை விட்டு சரியான நேரத்திற்கு உறங்கச் செல்ல வேண்டும்.

உணவு: இரும்புச்சத்து குறைபாடு ஆர்.எல்.எஸ்ஸிற்கு ஒரு காரணம் என்பதால் முருங்கைக்கீரை, வெந்தயம், பட்டாணி, பீன்ஸ், உலர் பழங்கள் சிவப்பிறைச்சி, கோழி, மீன், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள், தக்காளி, புரோக்கோலி, மிளகுத்தூள் ஆரஞ்சு, திராட்சை, முலாம்பழம், கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

வீட்டு வைத்தியம்: வீட்டு வைத்தியத்தில் சூடான குளியல், கால் மசாஜ் மற்றும் கால்களில் சூடான ஹாட் வாட்டர் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். குளிக்கும்போது சுடு தண்ணீரை வலிக்கும் இடங்களில் வைத்து மசாஜ் செய்யலாம். அதேபோல கால்களில் வெப்பமூட்டும் பட்டைகள் அல்லது ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும். தூங்க செல்லும்முன் சூடான குளியல் எடுத்துக்கொள்வது தசைகளைத் தளர்த்தும்.

மன ரீதியான செயல்பாடுகள்: புத்தகம் வாசித்தல், புதிர்களை விடுவிப்பது போன்றவை உடல் வலியில் இருந்து மனதை திசை திருப்ப உதவும். அதேநேரம் தகுந்த நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com