பச்சிளம் குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும். டயப்பரை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஈர டயப்பருடன் நீண்ட நேரம் இருப்பதும், மிகவும் டைட்டான டயப்பர் அணிவிப்பதாலும், குழந்தைக்கு டயப்பர் ரேஷ் (Diaper Rash) ஏற்படுகிறது. பச்சிளம் குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. உடலில் ரேஷஷ் தோன்றும்போது, சருமம் கன்றிச் சிவந்து, மேல் சருமம் உரிந்து போகும். அதில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் தோன்றி சில சமயங்களில் சீழ் பிடிக்கும்.
டயப்பர் ரேஷை சரிசெய்வது எப்படி?: முதலில் மல, ஜலம் கழித்த பட்டுப்பாப்பாவின் ஈரமான சருமத்தை, இளம் வெதுவெதுப்பான தண்ணீரில் பருத்தி துணியில் முக்கி மென்மையாகத் துடைக்கவும். பின் மெல்லிய துணியால் துடைத்து உலர வைக்கவும்.
அதற்குப் பின் தேவையான ஆயின்மென்ட் அல்லது தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினாலே காயம் சரியாகிவிடும். வீட்டிலேயே தயாரித்த தயிரை காயத்தில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். இயற்கையாகவே தயிரில் பூஞ்சைகளை எதிர்க்கும் திறன் இருக்கிறது. ஆலிவ் எண்ணெயும் சருமத்தை மென்மைப்படுத்துகிறது.
வராமல் தடுக்க: டயப்பர் ரேஷ் வந்த பாப்பாவுக்கு சோப்பு போடக்கூடாது. கெமிக்கல் கலந்த வெட் டிஷ்யூவும் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தை இன்னும் எரிச்சல் அடைய வைத்துப் புண்ணாக்கும்.
வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கக் கூடாது. பருத்தியால் ஆன டவல் சுற்றியோ, பருத்தி ஆடைகளை அணிவித்தோ, வாட்டர் ப்ரூஃப் மேட்டரஸ் அல்லது ரப்பர் சீட்டில் குழந்தையை படுக்க வைக்கலாம். அது ஈரம் பண்ணி விட்டால், உடனே துடைத்து துணி மாற்ற வேண்டும். வெளியில் செல்லும்போதும், இரவிலும் டயப்பர் அணிவித்தால் கட்டாயம் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அதை மாற்றி வேறு அணிவிக்க வேண்டும்.