

கதண்டு (Wasp) என்பது இந்தியப் பகுதிகளில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், காணப்படும் ஒருவகை விஷப்பூச்சியைக் குறிக்கிறது. கதண்டு கடித்து இறந்தவர்கள் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக கதண்டு கடி என்பது ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். இந்தப் பதிவில் கதண்டு கடிக்கு என்ன முதலுதவி செய்யலாம் என்பதை பற்றி விரிவாக காண்போம்.
நிறைய பேர் கதண்டு மற்றும் தேனீ இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆகும். கதண்டு என்பது ஒருவகையான மஞ்சள் நிற குளவி. தேனீயுடைய கொடுக்கு கடித்த இடத்திலேயே உடைந்துவிடும். எனவே, தேனீ மறுபடி மறுபடி கடிக்காது. ஆனால், கதண்டிற்கு உறுதியான கொடுக்குகள் உள்ளதால், நம்மை திரும்ப திரும்ப கடிக்க முடியும். அதனுடைய திரவத்தை எளிதாக நம் உடலில் செலுத்த முடியும்.
தேனீ போலவே கதண்டும் கூட்டம் கூட்டமாக கூடு கட்டி வாழக்கூடியவை. பொதுவாகவே கதண்டுகள் மனிதர்களிடம் இருக்க விரும்பாது. காடுகளிலேயே வசிக்கும்.
கதண்டு கடித்தால் என்ன ஆகும்?
கதண்டு கடித்தால் முதலில் சிவந்து போய் வலி ஏற்படும். வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க, குளிர்ந்த ஒத்தடம் அல்லது ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் வைத்து வைக்கலாம். கதண்டினுடைய உமிழ்நீரில் உள்ள ரசாயனம் சிலருக்கு ஒவ்வொமையை ஏற்படுத்தும். இதற்குரிய Antihistamines மருந்துகள், அலர்ஜியை தடுக்கக்கூடிய மருந்துகளை கொடுத்து எளிமையாக இதை குணப்படுத்தலாம். டாக்டரிடம் சென்று அலர்ஜிக்கான ஊசி போட்டு உடனே இதை குணப்படுத்தி விடலாம்.
கதண்டுடைய கொடுக்கில் Mastroparan மற்றும் Phospholipase A1 என்ற வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை இரண்டுமே விஷத்தன்மை கொண்டவை. குளவி கொட்டும் போது இதை நம் உடலில் செலுத்திவிடுகிறது. இதனால் சிறிது நேரத்தில் மூச்சுக்குழாயில் திரவங்கள் சுரந்து மூச்சுவிட சிரமங்கள் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை எடுக்காமல் விட்டால் இறப்புக்கூட ஏற்படும்.
கதண்டு கடித்து மூச்சுவிட சிரமப்பட்டால், இருமல், விழுங்குவதில் சிரமம், வியர்த்தல், தலைசுற்றல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், வாந்தி அல்லது குமட்டல் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.
கிராமப்புரங்களில் மஞ்சள் மற்றும் வேப்பிலை பயன்படுத்துவார்கள். மஞ்சளில் Curcumin உள்ளது. இது Anti inflammatory ஆக செயல்படுகிறது. வேப்பிலை Anti microbial உள்ளது. இருப்பினும் எமர்ஜென்சி சமயங்களில் இதை பயன்படுத்த முடியாது. Allergic reactions உள்ளவர்கள் Epipen ஐ பயன்படுத்துவது நல்லது. இந்தக் கடி மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுவதால், நாட்டு வைத்திய முறைகளை நம்பாமல், தாமதப்படுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெறுவதே சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)