தற்போது சின்னக் குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் நிலை இருக்கிறது. ஒவ்வொரு வருடமோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ கண் டாக்டரிடம் சென்று பரிசோதித்தால் கண்ணின் பவர் கூடியுள்ளது என்று சொல்லி லென்ஸை மாற்றச் சொல்வார் மருத்துவர். கண்ணாடியை தொடர்ந்து அணிந்திருக்கும்போது கண்ணின் பவர் கூடுமே தவிர, குறையாது. ஆனால், ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில முறைகளைக் கடைப்பிடித்தால் பவர் கூடுவது குறைந்து தெளிவான பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
1. திரிபலா பொடி கொண்டு கண்ணைக் கழுவுதல்: திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் இவை மூன்றும் கலந்த கலவை ஆகும். ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதை வடிகட்டி அந்த நீரினால் கண்களை கழுவ வேண்டும். இது கண்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து பார்வையை தெளிவாக்கும்.
2. கண் பயிற்சிகள்: சில குறிப்பிட்ட கண் பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்ணைச் சுற்றி உள்ள தசைகளையும் நரம்புகளையும் வலுவாக்கி பார்வையை கூர்மையாக்கலாம். 30 நொடிகள் தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும். பின்பு அருகில் உள்ள பொருளை 30 நொடிகள் பார்க்க வேண்டும். இதை ஒரு நாளில் பலமுறை செய்து வர வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் கண் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைத்து பார்வை தெளிவாகும்.
3. நேத்ரா பஸ்தி முறை: இது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். மாவினால் செய்யப்பட்ட ஒரு வளையத்தை கண்களை சுற்றி வைக்க வேண்டும். அதில் இளம் சூடான நெய்யை ஊற்ற வேண்டும். இது கண்ணுக்குள் ஈரப்பசையை அதிகரித்து, கண் வலியைக் குறைத்து பார்வையை தெளிவாக்குகிறது.
4. உணவு வகைகள்: வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள கேரட், பசலைக் கீரை, இனிப்பு சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அவகோடா, ப்ளூபெர்ரி, வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, பப்பாளி, சாத்துக்குடி, கீரைகள் போன்றவை எல்லாம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
5. நெல்லிக்காய்: இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. தினமும் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் கண் பார்வையை தெளிவாக்குகிறது. மேலும், வயதாவதால் உண்டாகும் கண் பிரச்னைகளையும் சரி செய்கிறது.