
கொல்லாஜன் காபி குடிச்சிருக்கீங்களா நீங்க? இதை அல்டிமேட் ப்யூட்டி ட்ரிங்க் எனவும் கூறலாம்!
நீங்கள் வழக்கமாக குடிக்கும் காபியுடன் கொல்லாஜன் சேர்த்து குடிக்கும்போது உங்களுக்கு காபி சுவை கிடைப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. சமீப காலங்களில் கொல்லாஜன் சப்ளிமென்டேஷன் பிரபலமாகி வருகிறது. கொல்லாஜன் என்பது ஒரு வகை புரோட்டீன். இது சருமம், எலும்பு, குருத்தெலும்பு மற்றும் தசைகளில் உள்ள திசுக்களின் வடிவமைப்பு மற்றும் நீட்சித் தன்மையை (Elasticity) பராமரிக்க உதவும்.
கொல்லாஜன் சப்ளிமென்டை நம் உணவுடன் சேர்த்துக்கொள்வதால் சருமம் நீரேற்றம் பெறும். சருமத்தின் தோற்றம் மெருகேறும். நீட்சித்தன்மை அதிகரித்து, சுருக்கங்களும் ஃபைன் லைன்களும் குறையும். தோற்றத்தில் முதுமையின் அறிகுறிகள் தோன்றுவது குறையும்.
மூட்டுக்களை சுற்றியுள்ள குருத்தெலும்புகள் கொல்லாஜன் நார்களால் கட்டமைக்கப்பட்டவை. எனவே கொல்லாஜன் மூட்டுக்களின் வலியையும் குறைக்க உதவும். கொல்லாஜன் சப்ளிமென்டேஷன் எடுத்துக்கொள்வதால், வயதானதின் காரணமாக எலும்புகளில் உண்டாகும் தேய்மானம் தடுக்கப்படும். மேலும் கொல்லாஜன் முடி, மற்றும் நகங்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவி புரியும்.
கொல்லாஜன் சப்ளிமென்டை எடுத்துக்கொள்ளும் விதம்: இது பவுடர், கேப்ஸ்யூல், திரவம் என பல வடிவங்களில் கிடைக்கக் கூடியது. இதை உணவுகளுடனும், பல வகையான பானங்களுடனும் சேர்த்து உட்கொள்ளலாம். இதை சேர்ப்பதால் உணவின் சுவையில் எந்த மாற்றமும் உண்டாகாது. அநேகமாக பல வகையான கொல்லாஜன் சப்ளிமென்ட்களில் ஹைட்ரோலைஸ்டு (Hydrolyzed) கொல்லாஜன் சேர்க்கப்பட்டிருக்கும். அதாவது சுலபமாக உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்காக சிறிய வடிவிலான இரசாயன பிணைப்பு (Peptide) களாக கொல்லாஜன் உடைக்கப்பட்டு சப்ளிமென்ட்களில் சேர்க்கப்பட்டிருக்கும்.
கொல்லாஜன் காபி பயனுள்ளதா?
காபியில் கொல்லாஜன் கலக்கப்படுவதால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கின்றன. சோஷியல் மீடியாக்களிலும் இது ட்ரெண்டிங்காகி வருகிறது. சூடான காப்பியில் கொல்லாஜன் ப்ரோட்டீனை சேர்ப்பதால் எவ்வித கெடுதலும் ஏற்படாது. ஏனெனில் காப்பியின் சூட்டைவிட மிக அதிகமான கொதிநிலை கொண்ட உணவுகளில் கொல்லாஜன் சேர்க்கப்படும் போது மட்டுமே அதிலிருந்து கிடைக்கப்பெறும் நன்மைகளின் அளவும் தரமும் குறைய வாய்ப்பாகும்.
காப்பியில் கொல்லாஜெனை எப்படி சேர்ப்பது?
காபியை தயாரித்து வைத்துக்கொண்டு அதில் பரிந்துரைத்த அளவு கொல்லாஜனை சேர்த்து அது கரையும் வரை நன்கு கலக்க வேண்டும். அவ்வளவுதான்!
டிப்ஸ்: சுவையூட்டப்படாத உயர்தரமான கொல்லாஜனை தேர்ந்தெடுப்பது காபியின் ஒரிஜினல் சுவை மாறாதபடி பாதுகாக்க உதவும்.
கொல்லாஜனை முழுமையாக கரைய விடவும்.
முதன் முறையாக உபயோகிப்பவர்கள் கொஞ்சமாக ஆரம்பித்து பின் தேவையான அளவுக்கு கூட்டிக் கொள்ளலாம்.
கொல்லாஜன் காபியை ஃபிரஷ்ஷாக அருந்துவது முழு பலனும் கிடைக்க உதவும்.
கொல்லாஜன் காபி குடிப்பதால் நமக்கு காபி குடித்த அனுபவத்துடன் பல வகையான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
காபி தவிர ஸ்மூத்தி, டீ, சூப், ஜூஸ், யோகர்ட், நார்மல் வாட்டர் ஆகியவற்றிலும் கொல்லாஜனை கலந்து உட்கொள்ளலாம்.