

உலகத்தில் மக்கள் அனைவரும் எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் மன அழுத்தம், கவலை போன்ற எத்தனையோ விதமான துன்பங்களை மனதிலேயே வைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டால்? அன்பான சொல்லும், அழகான அரவணைப்பும் என்று தான் கூற வேண்டும்.
இந்த அரவணைப்பு என்பது நமக்கு பிடித்தவர்கள் ஏதாவது கஷ்டத்திலோ, கவலையிலோ இருந்தால் அவர்களை கட்டிப்பிடிப்பது அவர்களின் மனதிற்கு நல்ல ஆறுதலை தரும் முறையாகும். கணவன், மனைவி ஆகிய இருவரும் இந்தக் காலத்தில் ஏதாவது ஒரு பிரச்னையில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்னை ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பேசும்போது மன நிம்மதி அடைகிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது அவர்களுக்கு நம் மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது. அவர்கள் எப்போதுமே நம் வாழ்க்கையில் கூடவே இருப்பார்கள் என்ற தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது. இதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் உள்ள உறவு வலுப்பெறுகிறது. இப்படி எத்தனையோ விதமான நன்மைகள் கட்டிப்பிடிப்பதன் மூலம் எளிமையாகக் கிடைக்கிறது.
கட்டிப்பிடிப்பது என்பது காமத்தை மட்டும் சார்ந்ததல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இது அன்பின் வெளிப்பாடு என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நண்பர்களைத் தழுவிக் கொள்ளுங்கள்!
உங்கள் நண்பர்கள் ஏதாவது கவலை நிலையில் இருந்தால் அவர்களை கட்டி அணையுங்கள். அப்போது அவர்களுக்கு நீங்கள் ஒரு தைரியம் கொடுத்தது போன்று இருக்கும். இதனால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். நீங்கள் அவர்களுக்கு ஒரு உற்ற துணையாக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு கட்டிப்பிடிப்பதன் மூலம் உங்கள் நட்பிற்குள் இருக்கும் பிணைப்பு மிகவும் நெருக்கமாகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
கட்டிப்பிடிப்பது என்பது இரு இதயங்கள் இணையும் முறையாகும். இவ்வாறு கட்டிப்பிடிக்கும் போது ரத்த அழுத்தம் சீராகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. மனக் கவலைகள் குறைகிறது. மூளையில் 'சைட்டோஸின்' என்ற ஹார்மோன் சுரந்து உடல் ஒரு புத்துணர்ச்சி பெறுகிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
ஒரு நாளைக்கு மனதிற்கு பிடித்த நபரை 20 நிமிடம் கட்டிப்பிடிப்பதால் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அது மட்டுமல்லாது அதிகமாக கட்டிப்பிடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவில்லை என்று அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
நம் மனதிற்கு பிடித்தவர்களை கட்டிப்பிடிக்கும் போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி நிலையை அடைகிறார்கள் என்பதும், நாம் கட்டிப்பிடிக்கும் போது நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைகின்றன என்பதும் உண்மை.
ஒருவரை நாம் கட்டிப்பிடிக்கும் போது அவர்களுக்கு நாம் தைரியத்தை கொடுக்கின்றோம். இதனால் அவர்கள் நம்மை எப்பொழுதும் நேசித்துக் கொண்டே இருப்பார்கள் என்பது மெய்யாகும்.