
ஒருவர் ஒரு தீய பழக்கத்தை மேற்கொள்கிறார் என்றால், அது அவருக்கு சுகமளிக்கக் கூடியதாக இருக்கலாம்; ஆனால் அதனால் மற்றவர்கள் முகம் சுளிப்பதாக இருக்கக் கூடாது.
ஓரிடத்தில் நாலைந்து பேர் பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். அந்த நிறுத்தத்தின் தூண் மீது சாய்ந்தவாறு, ஒருவர் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்னவோ ஆனந்தம்தான்; ஆனால் அருகிலிருந்த மற்றவர்களுக்கு ஆத்திரம்தான். புகையின் நாற்றம் வயிற்றைக் குமட்ட, அவர் கையிலும் பிறகு வாயிலும் புகைந்து கொண்டிருந்ததைப் பிடுங்கிப் போட்டுவிடும் வெறுப்பில் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கைக்குட்டை வைத்திருந்தவர்கள் அதனால் மூக்கையும், வாயையும் மூடிக் கொண்டார்கள்.
புகைப் பிடிப்பது என்ற இந்தப் பழக்கம், பொதுவாக இளைஞர்களின் விடலைப் பருவத்தில்தான் ஆரம்பிக்கிறது; அதாவது இது தீயது; தீண்டத்தகாதது என்று பெரியவர்களால் ஒதுக்கப்பட்ட ஒரு பழக்கத்தை, ஒரு வீம்புக்காகவும், தன் எதிர்ப்பைக் காட்டவும்தான் இளைஞர்கள் புகைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
தனக்கு அதில் ஏதோ சுகம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்பவர்கள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறோமே, சுற்றி இருப்பவர்கள் உடல்நலத்தை பாதிக்கச் செய்கிறோமே என்று சிந்திப்பதே இல்லை. புகைப் பிடிப்பதால் தாங்கள் சுறுசுறுப்படைவதாகத் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் அவர்கள். மருத்துவ ரீதியாக அப்படி எந்த அற்புதமும் நிகழ்ந்து விடுவதில்லை என்று மருத்துவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். முக்கியமாக படைப்பாளிகள், தங்கள் மூளையை புகையின் நச்சுப் பொருள் சூழ்ந்து அதனை உற்சாகமடைய வைக்கிறது; அதனால் புதிய, புதுமையான கருத்துகள் தோன்றுகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்படி எந்தப் பழக்கமுமில்லாமல், ஆழ்ந்த சிந்தனை மூலமே எல்லா சாதனைகளையும் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
வெளியிடத்தை விடுங்கள், வீட்டிற்குள்ளேயே மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் எத்தனை பேர், குடும்பத் தலைவர் மேற்கொண்டிருக்கக் கூடிய அந்தப் பழக்கத்தை சகித்துக் கொள்கிறார்கள்? நிச்சயமாக யாரும் இருக்க முடியாது. இதில் வேதனை என்னவென்றால், குடும்பத்தாருக்கு ஏற்படக் கூடிய பல உடல்நலக் கோளாறுகளுக்கு அந்தப் புகை மூட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தன் விருப்பத்துக்காகப் பிறர் நலனை பலியிடும் இத்தகையவர்களை எப்படித் திருத்துவது அல்லது அந்தப் பழக்கத்தைக் கைவிடச் செய்வது? இவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டி, அந்தப் பழக்கத்தால் வாய், நுரையீரல் பகுதிகளில் பாதிப்பு வரும்; புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது என்ற வாசகங்களோடு, பாதிக்கப்பட்ட நுரையீரல், பற்கள் மற்றும் ஆங்கிலத்தில் கேன்ஸர் எனப்படும் கடகம் அதாவது தேள் படத்தையும் சிகரெட் பெட்டியில் அச்சிடுகிறார்கள். ஆனால் எத்தனை பேர் அதைப் பார்த்து பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்?
மொத்தத்தில் புகைப் பிடிப்பவர்கள் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருப்பதாகப் சென்னை நகரக் கல்லூரி ஒன்று சேகரித்த புள்ளி விவரம் தகவல் தெரிவித்தாலும், புதிய இளைய சமுதாயத்தினர் அந்தப் பழக்கத்தைப் புதிதாக மேற்கொள்வதையும் எடுத்துச் சொல்லி கவலைப்படுகிறது.
சாம, தான, பேத, தண்டம் என்று சொல்வார்கள், அதைப்போல அமைதியாகச் சொல்லி, அறிவுரையாகச் சொல்லி, கடுமையாக கண்டித்துச் சொல்லியும் கேட்காதவர்களை தண்டனை கொடுத்துதான் திருத்த வேண்டும் என்பார்கள்.
அதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. சரி, எந்தப் பொது இடம், புகை பிடிப்பவர்கள் எத்தனை பேரைப் பிடிப்பது என்பது எப்படி சாத்தியமாகும்? அதற்காகவே காவல் துறையின் ரோந்து வாகனங்களைப் போலவே இந்த வாகனங்களும் நகரில் பொது இடங்களைக் கண்காணித்தால்தான் அது முடியும். எங்கேனும் புகை தெரிந்தால், அதை வெளிவிடுபவரிடமிருந்து அந்த இடத்திலேயே அபராதத் தொகையை வசூலிக்கவும் செய்யலாம். தண்டம் செலுத்துவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், பிறர் முன்னிலையின் அது நிகழ்வது அவமானம் என்பதால் உடனடியாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒருவருடைய உடல்நலத்தைப் பாதுகாக்க அவருக்கே தண்டனை வழங்க வேண்டியிருப்பது விநோதம்தான்!