
பொதுவாக நாம் அனைவருக்கும் தூக்கமின்மை என்பது உடலில் ஏற்படும் ஒரு வகை பாதிப்பு என்பது தெரிந்திருக்கும். ஆனால் அதிகமாக தூங்குவதும் ஒரு வகை நோய் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் அதிகமாக தூங்குவதும் ஒரு வகை நோய் தான். இதனை ஆங்கிலத்தில் Hypersomnia என்று அழைப்பர். இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கினாலும் பகலிலும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் தூங்குவதில் போதும் என்ற மனநிலையே ஏற்படாது. அன்றாட செயல்பாடுகளான அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது, பயணம் செய்யும்போது, சாப்பிட்டு முடித்த பிறகு என சிறு சிறு இடைவெளிகள் கிடைத்தாலும் தூங்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இருப்பார்கள்.
இந்த வகை அதிதூக்கம் ஒரு வகை நரம்பு மண்டல பிரச்சனையாகும். பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மாறி மாறி போடப்படும் ஷிப்ட் முறையில் வேலை செய்யும் போது பகலில் தூங்குவது இயற்கை தான். ஆனால் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் எவ்வளவு தூங்கினாலும் பகலிலும் தூங்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பர்.
இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் சோர்வுடனும், அதிக மன அழுத்தத்துடன், கவலையுடனும் காணப்படுவர். இதோடு இவர்களுக்கு பசியின்மையும் அதிகமாக காணப்படும். இந்த வகை நோயால் பாதிக்கப்படுபவர்களால் பெரும்பாலும் எந்த ஒரு வேலையும் கருத்துஊன்றி செய்ய முடியாது. எப்போதும் ஒரு வகை குழப்பத்துடனே மனச்சோர்வுடனே காணப்படுபவர். கவனச்சிதறல் இவர்களுக்கு முக்கியமான பிரச்சினையாக இருக்கும். அதனால் அன்றாட வேலைகளை கூட முறையாக திட்டமிடுவதிலும் முடிவெடுப்பதிலும் தடுமாற்றம் நிறைந்தவர்களாக இருப்பார்கள.
இரவில் தூங்கக் கூடிய தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக இல்லாததும், ஏதேனும் இணை வியாதிகளுக்கு தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டு வருவதாலும், முறையற்ற உணவு பழக்க வழக்கங்களாலும், முறையற்ற அன்றாட பழக்கவழக்கங்களாலும் இப்பிரச்சினை ஏற்படக்கூடும். சில நேரங்களில் செரிமான உறுப்புகள் சரிவர வேலை செய்யாததாலும் இந்த வகை பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சிறியளவில் ஏற்படக்கூடிய இந்தப் பிரச்சினை, சரியாக கவனம் செலுத்தாவிட்டால், தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இரவில் தூங்கும் போது போதுமான நேரம் தூக்கம் இருந்தாலும் ஆழ்ந்த தூக்கம் இல்லாததும் ஒருவகை மனச்சோர்வுடன் இருப்பதற்கு முக்கிய காரணமாக அமையும்.
இதனை சரி செய்ய முறையான அன்றாட பழக்கவழக்கங்களான சரியான நேரத்திற்கு உறங்குதல், சரியான நேரத்தில் எழுதல், போதிய அளவு உடற்பயிற்சி செய்தல் போன்றவையும், உணவு பழக்க வழக்கங்களான நேரத்திற்கு சரியாக சாப்பிடுதல், அதிகப்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் பண்டங்களை தவிர்த்தல், சரிவிகித உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுதல், போதிய அளவு நீர் அருந்துதல் போன்றவை மிகவும் அவசியம். மேலும் இதற்கு முறையான யோக பயிற்சி முறைகளை மேற்கொள்ளுதல், உரிய மருத்துவரை அணுகி அதற்கு உரிய அக்குபஞ்சர் சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.
அதிகமாக தூங்குவது இயல்பு தானே என கவனக்குறைவாக நினைக்காமல் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது மிகவும் நன்று.