

தேங்காய் எண்ணெய் சமையல் முதல் கூந்தல் பராமரிப்பு வரை மக்களால் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக சந்தையில் கிடைக்கும் பல தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளில், லாப நோக்கத்திற்காக 'மினரல் ஆயில்' (Mineral Oil) கலக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பார்ப்பதற்குத் தெளிவாகவும், தேங்காய் எண்ணெய் போலவே மணமாகவும் இருப்பதால், இதில் ஒளிந்திருக்கும் பேராபத்தை நாம் உணர்வதில்லை.
மினரல் ஆயில் என்றால் என்ன?
மினரல் ஆயில் என்பது தேங்காய் எண்ணெயைப் போலத் தாவரங்களிலிருந்து எடுக்கப்படுவது அல்ல. இது கச்சா எண்ணெயைச் (Petroleum) சுத்திகரிக்கும் போது கிடைக்கும் ஒரு துணைப் பொருள். சாலை போடப் பயன்படும் தார் மற்றும் பெட்ரோல் எடுக்கும் அதே செயல்முறையில் இது கிடைக்கிறது. இது நிறமற்றது, மணமற்றது மற்றும் மிகவும் மலிவானது. இதனால்தான் பல நிறுவனங்கள் தேங்காய் எண்ணெயுடன் இதைச் சேர்த்துக் கலப்படம் செய்கின்றன.
சமையலில் மினரல் ஆயில்: ஏன் இது விஷம்?
நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் மினரல் ஆயில் கலந்திருந்தால், அது நம் உடலுக்கு விஷமாக மாறுகிறது.
செரிமானமின்மை:
தேங்காய் எண்ணெய் நம் உடலால் எளிதில் செரிக்கப்பட்டு ஆற்றலாக மாறும். ஆனால், மினரல் ஆயிலை நம் உடல் ஒருபோதும் செரிக்காது. இது குடலுக்குள் எந்த மாற்றமும் அடையாமல் அப்படியே பயணிக்கும். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் உபாதைகள் ஏற்படலாம்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிப்பு:
உணவில் உள்ள வைட்டமின்கள் A, D, E மற்றும் K போன்றவை கொழுப்பில் கரையக்கூடியவை. மினரல் ஆயில் குடலில் ஒரு படலம் போலப் படிந்து விடுவதால், இந்த அத்தியாவசிய வைட்டமின்களை உடல் உறிஞ்சுவதைத் தடுத்து விடுகிறது. காலப்போக்கில் இது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
சுவாசப் பிரச்சனைகள்:
மிக முக்கியமாக, சமைக்கும் போது மினரல் ஆயில் ஆவியாவதை நாம் சுவாசித்தால், அது நுரையீரலில் மெல்லிய எண்ணெய்ப் படலத்தை உருவாக்கி 'லிப்போய்ட் நிமோனியா' போன்ற தீவிர சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கூந்தல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள்:
கூந்தலுக்குத் தேங்காய் எண்ணெய் தடவுவது, அதன் வேர்க்கால்களைப் பலப்படுத்தத்தான். ஆனால் மினரல் ஆயில் கலந்த எண்ணெய் இதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது.
ஊடுருவ முடியாத தன்மை:
தூய தேங்காய் எண்ணெய் முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி புரத இழப்பைத் தடுக்கும். ஆனால், மினரல் ஆயில் முடியின் மேல் ஒரு பிளாஸ்டிக் பூச்சு போல அமர்ந்து கொள்ளும். இது தற்காலிகப் பளபளப்பைத் தருமே தவிர, முடியின் உள்ளே ஈரப்பதம் செல்ல விடாமல் தடுத்து, நாளடைவில் முடியை வறட்சியாக்கி உடைக்கச் செய்யும்.
உச்சந்தலை அடைப்பு:
மினரல் ஆயில் சருமத் துளைகளை அடைக்கும் தன்மை கொண்டது. இது உச்சந்தலையில் உள்ள துளைகளை அடைத்து, முடி வளர்ச்சியைத் தடுத்து, பொடுகு மற்றும் அரிப்பை உண்டாக்கும்.
கலப்படத்தைக் கண்டறிவது எப்படி?
லேபிளைக் கவனியுங்கள்: பாக்கெட்டின் பின்னால் 'மினரல் ஆயில், லிக்விட் பாரபின், ஒயிட் ஆயில், லிக்விட் பெட்ரோலியம் என்று குறிப்பிட்டிருந்தால் அதை அறவே தவிர்க்கவும். 100% தூய தேங்காய் எண்ணெய் என்று இருந்தால் மட்டுமே வாங்கவும். பாக்கெட்டில் உண்ணக்கூடிய எண்ணெய் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பாருங்கள். வெறும் 'ஹேர் ஆயில்’ என்று மட்டும் இருந்தால், அதில் மினரல் ஆயில் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
குளிர்காலச் சோதனை:
தூய தேங்காய் எண்ணெய் 24 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் உறைந்து வெண்மையாக மாறும். இது தேங்காய் வாசனையைக் கொண்டிருக்கும். மினரல் ஆயில் கலந்திருந்தால், அது முழுமையாக உறையாது அல்லது திரவ நிலையில் ஒரு அடுக்கு மேலேயே நிற்கும். இதில் வாசனையும் இருக்காது.
உறைநிலை சோதனை:
ஒரு சிறிய கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தூய தேங்காய் எண்ணெய் கல் போல உறைந்துவிடும். மினரல் ஆயில் கலந்திருந்தால், அது உறையாமல் திரவமாகவோ அல்லது எண்ணெய் பிசுபிசுப்புடனோ தனியாகத் தெரியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)