நம் முன்னோர்கள் நம்மை சுற்றியுள்ள மூலிகை செடிகளை நாம் மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் கொண்டாடும் பண்டிகைகளில் அவற்றை எதோ ஒரு வகையில் பயன்படுத்தி வந்தார்கள். பல மூலிகை செடிகள் மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படாமல் காலப்போக்கில் ஆன்மீக ரீதியாக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் தும்பைச் செடி பற்றிய குறிப்புகள் அதிகமாக இருக்கின்றன. இராமாயணத்தில் இராணவன் போரில் தும்பை பூ மாலை அணிந்திருந்திருந்தார் என்றும், இராமன் தான் அணிந்திருந்த துளசி மாலையுடன், தும்பை பூ மாலையும் அணிந்திருந்தார் என்றும் குறிப்புகள் கூறுகிறது. இவ்வாறு தும்பை பூ தமிழர்களின் வாழ்வியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் இந்த பதிவில் தும்பை பூவின் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.
தும்பை பூ பயன்கள்:
ஆயுர்வேதத்தில் தும்பை செடியை துரோண புஷ்பி என்று அழைப்பார்கள். பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலை தும்பை என பலவகையான தும்பைச் செடிகள் காணப்படுகின்றன. ஆங்கிலத்தில் இதை Leucas aspera என்று கூறுவார்கள்.
சிலருக்கு தலையில் நீர் கோர்த்திருந்தால் தலைவலி, தலைபாரம் ஏற்படும். இந்த தும்பை இலைச் சாறு எடுத்து மூக்கில் இரண்டு, மூன்று சொட்டுகள் விட்டால் தும்மல் வரும். இவ்வாறு தும்மும் போது தலையில் கோர்த்திருந்த நீர் விலகி நீண்ட நாள் இருந்த தலைவலி குறையும்.
பூரான், தேள், பாம்பு, போன்ற விஷ பூச்சிகள் கடித்தால் தும்பை சாறு இரண்டு, மூன்று சொட்டு மூக்கில் விட வேண்டும். மேலும் தும்பை சாறு சிறிதளவு குடித்தால் விஷம் வேகமாக உடலில் பரவுவது தடுக்கப்படும்.
தும்பைப் பூவை நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி அதை தலையில் தேய்த்து தலை குளித்து வர நீண்ட நாள் இருந்த ஒற்றைத் தலைவலி பிரச்சனை, மூக்கடைப்பு போன்றவை நீங்கும்.
ஒரு சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தும்பை பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இளஞ்சூடாக குடித்து வர நாவறட்சி தீரும்.
தும்பை இலை, பூ ஆகியவற்றை நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல், சளி, இருமல் நீங்கும்.
தும்பைச் செடியை அரைத்து பூச்சிக்கடியால் ஏற்பட்ட காயம், அரிப்பு மீது தடவி வர விரைவில் குணமாகும்.
தும்பைப் பூ, இலை, வேர் ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்ந்துவிடும்.
சாதாரணமாக தும்பை பூவை மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
சஞ்சீவி மூலிகையாக பார்க்கப்படும் இந்த தும்பை பூ கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.