இந்தியப் பெண்களின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க பெண்மணி ஐடா ஸ்கடர் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். இவர் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவிய பெருமை பெற்றவர். ஐடாவின் பெற்றோர் ஜான் ஸ்கடர் மற்றும் சோபியா ஸ்கடர். ஜான் ஒரு மருத்துவராக தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்து கொண்டிருந்த காலத்தில் ஐடா டிசம்பர் 1870ல் பிறந்தார். எட்டு வயதுக்குப் பிறகு கல்வி கற்க அமெரிக்காவுக்கு திரும்பினார்.
மருத்துவராகும் எண்ணத்தை விதைத்த நிகழ்வு: பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்த பின்பு இந்தியாவில் இருக்கும் தனது உடல்நிலை சரியில்லாத தாயைப் பார்ப்பதற்காக ராணிப்பேட்டைக்கு வந்தார். ஒரு நாள் இரவு ஐடாவின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. மூன்று ஆண்கள் தங்களின் மனைவியரின் பிரசவ உதவிக்காக ஐடாவை அழைத்தனர். அவரைப் பெண் மருத்துவர் என அவர்கள் நினைத்தனர். ஆனால், தான் மருத்துவர் இல்லை, தனது தந்தைதான் மருத்துவர். அவரை அழைத்து வருகிறேன் என்று ஐடா சொன்னபோது, அந்த மூவரும் மறுத்தனர். ஆண் மருத்துவரிடம் எங்கள் மனைவிகளுக்கு நாங்கள் பிரசவம் பார்க்க மாட்டோம் என்று மறுத்து, மூன்று ஆண்களும் திரும்பிச் சென்றனர். மறுநாள் பிரசவத்தின்போது அந்த மூன்று பெண்களும் இறந்து போனதை அறிந்த ஐடா மிகவும் மனம் வருந்தினார்.
இந்தியப் பெண்களின் அவல நிலை குறித்து ஆழமாக சிந்தித்த ஐடா, இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். வாழ்வில் பின்தங்கியவர்களுக்கான மருத்துவ சேவை இந்தியாவில் அவசியம் என நினைத்தார். மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்று, மருத்துவம் படித்தார். வசதியான வாழ்க்கை இருந்தபோதும் அவர் அதை மறுத்து, திருமணத்தையும் நிராகரித்து மருத்துவராக இந்தியாவுக்குத் திரும்பி தனது பணியைத் தொடங்கினார்.
மருத்துவ சேவை: வேலூரில் பெண்களுக்காக பிரத்தியேகமான மருத்துவமனை ஒன்றை தொடங்க வேண்டும் என்கிற ஆவல் ஐடாவுக்கு எழுந்தது. அதற்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஷெல் என்கிற ஒரு பெரியவர் பத்தாயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை தனது அன்பு மனைவி மேரி டைபர் ஷெல்லின் நினைவாக அளித்தார்.
1902ல், மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டது. தரமான மற்றும் இரக்கமுள்ள சுகாதாரப் பாதுகாப்பை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என ஐடா விரும்பினார்.1904 ம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவிய ப்ளேக் நோயை தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்காற்றினார். அதே சமயத்தில் பயிற்சி பெற்ற போதிய செவிலியர்கள் இல்லாத நிலை அவரின் மருத்துவப் பணிக்கு பெரும் தடையாக இருந்தது. செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது.
1908ம் ஆண்டு சுற்றுவட்ட ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.1909ம் ஆண்டில் தனது சாலையோர மருந்தகங்களைத் தொடங்கினார். சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு அமைச்சகம், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. 1918ம் ஆண்டு பெண் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரி ஒன்றை நிறுவினார். ஆயிரக்கணக்கான திறமையான அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் அங்கு உருவாகினர்.
வேலூர் CMC: வேலூரின் மையத்தில் 1923ம் ஆண்டு ஒரு பெரிய மருத்துவமனையை ஐடா கட்டினார். சிஎம்சியை நிறுவுவதற்கான டாக்டர் ஸ்கடரின் அணுகுமுறை உள்ளூர் பெண்களையும் சர்வதேச ஆதரவையும் உள்ளடக்கியது. பெண்களை சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களாகப் பயிற்றுவிப்பதை அவர் வலியுறுத்தினார். இக்கல்லூரி குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் தொடங்கி, பல ஆண்டுகளாக விரிவடைந்து, அதன் உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் கவனிப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்றது. அவரது தலைமையின் கீழ், CMC நர்சிங் மற்றும் ஹெல்த்கேர் கல்வியில் முன்னோடியாக மாறியது. அவர் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மன மற்றும் ஆன்மிக நல்வாழ்வையும் வலியுறுத்தினார்.