

உலகையே அதிரவைத்த 'நானோ ஊசி'! இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செய்த புதிய சாதனை - மார்பக புற்றுநோய்க்கு குறைந்த செலவில் தீர்வு
உலகளவில் சுகாதாரம் காரணமாக பெண்கள் இறப்பதில் ,மார்பகப் புற்றுநோய் முதன்மையான ஒன்றாக உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய் வகைகளில் மார்பகப் புற்றுநோய் ஒன்றாக உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில், பெண்களில் 28% பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக , கருப்பை வாய் புற்றுநோய் 14% பேரும் கருப்பை புற்றுநோய் 6% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு செய்யப்படும் பாரம்பரிய கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் பெரும்பாலும் புற்று செல்களுடன் நல்ல செல்களையும் சேர்த்து அழித்து விடுகிறது. மேலும் பல கடினமான பக்க விளைவுகளையும் இந்த சிகிச்சையில் தாங்கிக் கொள்ள வேண்டும் .
புற்று நோய் சிகிச்சையின் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தவும் , நோயாளிகளுக்கு அதி விரைவாக சிகிச்சையளிக்கவும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய நானோ ஊசி அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஊசி வெப்ப ரீதியாக நிலையான நானோ ஆர்க்கியோசோம்களை பயன்படுத்தி, புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான டாக்ஸோரூபிசினை நேரடியாக புற்றுநோய் செல்களுக்குள் செலுத்துகிறது. இது மிகக் குறைந்த அளவுகளில் மருந்துகளை கொண்டு அதிக ஆற்றலுடன் வேலை செய்கிறது. இந்த சிகிச்சை அறிமுகமாகும் போது அதற்கான செலவுகளும் குறைவாக இருக்கும்.
இந்த செயல் முறையில், நானோ ஆர்க்கியோசோம் மருந்து உறை , சிலிக்கான் நானோ குழாய் உள்செல்லுலார் மூலம் இணைப்பதால் ஆரோக்கியமான செல்களுக்கு சேதம் ஏற்படாது. இதனால் புற்றுநோய் செல்களுக்கு மட்டுமே மருந்து செலுத்தப்படும் , இது வலியை குறைக்கும் ஒரு துல்லியமான சிகிச்சையாக இருக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் , வருமானம் குறைந்த நாடுகளின் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை இழப்பதில் இருந்து பாதுகாப்பளிக்கும். "இங்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்கான செலவு மிகவும் அதிகமாகவே உள்ளது. புற்றுநோயை எதிர்க்கும் புதிய நானோ வகை ஊசி மருந்துகள் குறைவான அளவில் , அதிக செயல்திறனுடன் நோயாளிகளின் உடலுக்குள் வேலை செய்கிறது.
இதில் தேவைப்படும் மருந்துகளின் அளவு குறைவாக இருப்பதுடன் , இதன் விலையும் குறைவாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறை , புற்றுநோய் சிகிச்சையின் மொத்த செலவைக் குறைத்து நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்," என்று ஐஐடி மெட்ராஸின் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சுவாதி சுதாகர் கூறியுள்ளார்.
இந்த ஊசி அமைப்புகள் டைட்டானியம் அல்லது கார்பன் நானோ குழாய்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பிற நானோ இன்ஜெக்ஷன் அமைப்பை போல இருப்பதில்லை. சிலிக்கான் நானோகுழாய் அடிப்படையிலான இந்த புதிய வடிவமைப்பு இயல்பாகவே நச்சுத் தன்மை இல்லாதது , உயிரி இணக்கத் தன்மை கொண்டது , அதனால் , கூடுதல் மாற்றங்களுக்கான தேவையையும் குறைக்கிறது. எதிர்கால மருத்துவ முறைக்காக நம்பகமான செயல்முறையாகவும் இருக்கிறது.
நவீன நானோ ஊசி அடிப்படையிலான புதிய சிகிச்சை செயல்முறைகள் , ஒரு துல்லியமான நானோ மருத்துவத்தை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றத்தைக் அடைய வாய்ப்பாக அமைகிறது. இவை சோதனையை தாண்டி மக்களிடம் செல்லும் போது எதிர்காலத்தில் புற்றுநோய் பற்றிய பயமின்றி பெண்கள் வாழலாம்.