என்னது, கடுகு எண்ணெயில் கலப்படமா? கண்டுபிடிப்பது எப்படி?
இந்தியக் குடும்பங்களில் கடுகு எண்ணெயில் சமைப்பது பிரபலம். இதிலுள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு (LDL)களின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பு (HDL)களின் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
இது இயற்கையிலேயே ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டது. அதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், காயங்களை விரைவில் ஆற்றவும் கடுகு எண்ணெய் உதவி புரிகிறது. இத்தனை நன்மை தரக்கூடிய மஸ்டர்ட் ஆயில் 'கலப்படம்' என்னும் அசுரன் கையில் சிக்கியுள்ளது என்பதை அறியும் போது வேதனை ஏற்படுகிறது.
அர்ஜெமோன் ஆயில், மினரல் ஆயில், விளக்கெண்ணெய், கரெஞ்சா ஆயில், பருத்தி விதை ஆயில் போன்ற பல தரப்பட்ட, விலை குறைந்த, ஆரோக்கியமற்ற எண்ணெய்களை, தரமான சமையல் எண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றுடன் கலந்து விற்பது பல இடங்களில் சகஜமானதொன்றாக உள்ளது.
கடுகு எண்ணெயுடன் கலக்கப்படும், விலை குறைந்த பாம் (palm) ஆயில், உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் அதன் மூலம் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி இதய நோய் உண்டாகவும், ஜீரணக் கோளாறுகள் ஏற்படவும் காரணமாகிறது.
கடுகு எண்ணெய் சுத்தமானதா எனக் கண்டறிய நாம் நம் வீட்டிலேயே சில பரிசோதனைகளை செய்யலாம்.
1) ஃபிரீஸ் டெஸ்ட்: ஒரு பாட்டிலில் கடுகு எண்ணெய் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால், அதில் பாம் ஆயில் சேர்க்கப்பட்டிருந்தால், பாட்டிலின் அடியில் பாம் ஆயில் உறைந்து தங்கியிருப்பதைக் காணலாம்.
2) வாசனை டெஸ்ட்: கடுகு எண்ணெயை நேரடியாக மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்தால் ஒரு கடுமையான, கூர்மையான, விரும்பத்தகாத வாசனை வரும். அதில் கலப்படம் செய்யப் பட்டிருந்தால், ஒரு லேசான செயற்கைத் தன்மை கொண்ட வாசனை வரும்.
3) பிளாட்டிங் பேப்பர் டெஸ்ட்: ஒரு சிறு துண்டு பிளாட்டிங் பேப்பரில் ஒரு துளி கடுகு எண்ணெய் விட்டு பதினைந்து நிமிடம் அப்படியே விடவும். பிறகு பார்க்கும் போது பேப்பரில் லேசான எண்ணெய்க் கறை சமமாகப் பரவியிருந்தால் அது சுத்தமானது. கலப்படமானதாயிருந்தால், கறை அடர் நிறத்தில் பிசு பிசுப்புடன் சமநிலையின்றிப் பரவியிருக்கும்.
பாம் ஆயில் அதிகளவில் உடலில் சேரும்போது, அதிலுள்ள சாச்சுரேட்டட் கொழுப்பானது, குறிப்பாக பால்மிடிக் ஆசிட், உடலில் LDL கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. மெட்டா பகுப்பாய்வும் (Meta-Analysis) இதை உறுதிப்படுத்துகிறது. தொடர்ந்து உடலில் LDL கொழுப்பு சேரும்போது அது இஸ்கிமியா என்ற குருதி ஊட்டக் குறைபாடை உண்டுபண்ணி ஹார்ட் அட்டாக் இறப்பை அதிகரிக்கச் செய்யுமென பல நாடுகளின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
சமைப்பதற்கு எப்போதும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் எண்ணெயை மட்டும் பயன்படுத்துவது நல்லதல்ல என்ற கருத்தும் நடை முறையில் நிலவுகிறது. எனவே ஒரு நம்பகத்தன்மையுடைய டயட்டீஷியனை கலந்தாலோசித்து உங்கள் தேர்வை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.