ருசி முக்கியமா? உயிர் முக்கியமா? ஹோட்டல் உணவுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

People eating in hotel and food servings
Hotel foods
Published on

வீட்டு சாப்பாடு ஆரோக்கியமானது. ஹோட்டல் சாப்பாடு (Hotel foods) ருசியானது. ஆரோக்கியமா? ருசியா? என்றால் பலரும் தேர்ந்தெடுப்பது ருசியைத் தான். மாதம் ஒரு முறை வெளியில் சாப்பிட்டது போய் வாரம் ஒரு முறை என்றாகி, இப்பொழுது அடிக்கடி வெளியில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வெளியில் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமாக உள்ளதா? என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) கடுமையான விதிகளை விதித்துள்ளது. இருப்பினும் நடைமுறையில் சுகாதாரத்தின் தரம் ஹோட்டலுக்கு ஹோட்டல் மாறுபடுகிறது. சுகாதாரமான உணவு பரிமாறப்படுவது பெரும்பாலும் ஹோட்டலின் தரத்தையும், அதன் உணவு பாதுகாப்பு நிர்வாகத்தையும் பொறுத்தது.

வாடிக்கையாளர்களாகிய நாம் தான் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து, சுகாதாரமான முறையில் பரிமாறப்படுகிறதா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் உணவுப் பரிமாறும் முறையை கவனிப்பது அவசியம்.

ஹோட்டலில் தயாரிக்கும் உணவில் சுவையை கூட்டுவதற்காக வெண்ணெய், எண்ணெய், வினிகர், உப்பு ஆகியவை அதிக அளவில் சேர்த்து சமைக்கப்படுகிறது. எனவே, ஆர்டர் செய்வதற்கு முன்பு நம் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நம் உடல்நிலைக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்யலாம்.

ஹோட்டல்களில் ஊழியர்களின் சுகாதாரம், உணவுகளை கையாளும் முறைகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை கவனிப்பதன் மூலம் ஹோட்டல் உணவுகள் சுகாதாரமானதா என்பதை நம்மால் ஓரளவுக்கு உறுதி செய்து கொள்ள முடியும். உணவை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும். அத்துடன் உணவு பரிமாறும் ஊழியர்கள் தலைக்கவசம் (Hairnets), கையுறை (Gloves) மற்றும் கவசம்(Aprons) அணிந்துள்ளார்களா என்பதையும் கவனிக்கலாம்.

சமைத்த உணவுகளை தனித்தனியாக கையாள வேண்டியது அவசியம். அப்படி சமைத்த உணவுகள் மற்றும் பஃபேக்களில் உணவு சூடாக வைக்கப்பட்டுள்ளதா, மூடப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனி கரண்டிகள் அல்லது கருவிகள் பயன்படுத்தப் படுகிறதா? என பார்க்கவும். உணவை பரிமாறுவதற்கு கைவிரல்களை பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது. கரண்டிகள், ஸ்பூன்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

சமைப்பதற்கும் குடிப்பதற்கும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறதா? உணவுக் கழிவுகளை முறையாக மூடி வைக்கப்பட்ட தொட்டிகளில் சேகரித்து அப்புறப்படுத்த படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லையெனில் அம்மாதிரியான ஓட்டல்களில் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் வாந்தி, பேதி, ஃபுட் பாய்சன் போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
Text Neck: நவீன காலத்து 'சைலண்ட் கில்லர்'! வேண்டாம் இந்த விபரீதம்!
People eating in hotel and food servings

உணவகத்தின் தரம் குறித்து நமக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால் அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்டால் FSSAI Food Safety Connect போர்ட்டலில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com