ஆயுர்வேதத்தில் சில வகை உணவுகள் அவற்றிலிருக்கும் அதீதமான ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக, ‘அமிர்தம்’ என்று அழைக்கப்படுகின்றன. நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டிருப்பதாலும், உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காப்பதற்கு பயன்படுவதாலும், முக்கியமான இந்த 9 வகை உணவுகள், ‘அமிர்தம்’ என்று கூறப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மஞ்சள்: ஆயுர்வேத மருத்துவத்தில், ‘கோல்டன் ஸ்பைஸ்’ என அழைக்கப்படுகிறது மஞ்சள். இதிலுள்ள குர்க்குமின் என்ற கூட்டுப்பொருள் சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை சிறப்பாக்கவும், சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
2. அஸ்வகந்தா: இது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும், உடலில் ஸ்டெமினாவை அதிகரிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்யவும் உதவும். மேலும், இந்த மூலிகை மூளையின் இயக்கங்களை சிறப்பாக்கவும், ஆழ்ந்த தூக்கம் பெறவும், சக்தியின் அளவை அதிகரிக்கவும் உதவி புரியும். வயது முதிர்ந்தவர்களின் தோற்றத்தை இளமையுடனும் துடிப்புடனும் காணப்படச் செய்யும்.
3. நெய்: இதில் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம் உள்ளது. அது ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; உணவுகள் சிறந்த முறையில் செரிமானம் ஆகவும், ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்படுவதற்கும் உதவி புரியும். மேலும், மூளையின் செயல்பாடுகள் சிறக்கவும், மூட்டுக்களுக்கு நெகிழ்வுத்தன்மை தந்து அசைவுகள் சிரமமின்றி இயங்கவும் உதவும்.
4. நெல்லிக்காய்: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமானம் சிறப்பாகவும், சரும ஆரோக்கியம் மேம்படவும் உதவும். மேலும், ஆம்லா கல்லீரல் சிறந்த முறையில் வேலை செய்யவும் முடி ஆரோக்கியமாய் வளரவும் உதவும்.
5. தேன்: தேன் ஓர் இயற்கை இனிப்பூட்டி. உடலின் சக்தியை அதிகரிக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டவும் உதவும். இதன் ஆன்டி மைக்ரோபியல் குணமானது, இதை இருமல் மற்றும் சளி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக்கியுள்ளது.
6. ஜாமுன் பழம்: இப்பழம் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும். கோளாறில்லாத செரிமானம் நடைபெற உதவும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியம் காக்கும்; வாய் துர்நாற்றம் போக்கி ஈறுகளைப் பலப்படுத்தும். சருமத்தில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளையும் குணப்படுத்த உதவும்.
7. துளசி: மன அழுத்தத்தைக் குறைக்கவும், மூச்சுப் பாதை மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் துளசி. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்களானவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காக்க உதவும்.
8. ஜிலோய் (Giloy): இது இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கும்; செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். அடிக்கடி வரும் காய்ச்சலை குணப்படுத்தும். மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகளை நீக்கும். இந்த அபூர்வ மூலிகை உடலின் பல வகையான நோய்களை குணப்படுத்த உதவும்.
9. இஞ்சி: இது தளர்வுற்ற தசைகளை பலமடையச் செய்யும். தசைகளில் வலியிருந்தால் அதை குணமடையச் செய்யும். குமட்டல் மற்றும் வாந்தி வரும் அறிகுறிகளை நீங்கச் செய்து உடல் நலமடைய உதவும். அஜீரணத்தைப் போக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதன் உஷ்ணம் தரும் குணமானது சளிக்கும் ஃபுளு ஜுரத்திற்கும் இதை சிறந்த மருந்தாகப் பயன்படுத்த உதவுகிறது.
‘அமிர்தம்’ எனப்படும் இந்த 9 வகை உணவுகளை அனைவரும் உட்கொள்வோம். உடல் ஆரோக்கியம் பெறுவோம்.