குழந்தைகளை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் செரிமான மண்டலம். செரிமான மண்டலத்தில் ஏற்படும் சிறு கோளாறுகள் கூட குழந்தைகளின் வளர்ச்சியை பாதித்து அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஜீரணக் கோளாறுகளின் காரணங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றி பார்க்கலாம்.
ஜீரணக் கோளாறுகளின் காரணங்கள்:
சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, சரும அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரை வகையை சில குழந்தைகளால் செரிமானம் செய்ய முடியாது. இது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அசுத்தமான உணவை உண்பதால் குழந்தைகளுக்கு உணவு விஷம் ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.
சில குழந்தைகளுக்கு வைரஸ், பாக்டீரியா, புஞ்சைத் தொற்று காரணமாக குடலில் அழற்சி ஏற்பட்டு, அஜீரணப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், மன அழுத்தம், பதட்டம் காரணமாகவும் குழந்தைகளுக்கு அஜீரண பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஜீரணக் கோளாறுகளின் அறிகுறிகள்:
வயிற்றுப்போக்கு
வாந்தி
வயிற்று வலி
வாயு
மலச்சிக்கல்
உணவு உண்ண மறுப்பது
எடை குறைவு
தோல் அரிப்பு
களைப்பு
ஜீரணக் கோளாறுகளுக்கான தீர்வுகள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் ஜீரணக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் அதற்கான காரணத்தைக் கண்டறிவது முக்கியம். காரணத்தைக் கண்டறிந்த பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு வகைகளை குழந்தைகளின் உணவில் இருந்து நீக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களுக்கு பதிலாக லாக்டோஸ் இல்லாத பிற உணவுகளைக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு என்றும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். குறிப்பாக, எந்த மருந்தையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே கொடுக்கக்கூடாது. ஒருவேளை, ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவுகளாக ஜீரணக் கோளாறு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை மாற்றுவது நல்லது.
குழந்தைகளின் ஜீரண கோளாறுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். சிறிய கோளாறுகளை கவனிக்காமல் விட்டால் அது பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களை கவனித்து அவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.