
நிஸ்டாக்மஸ் என்பது கண் நரம்பியல் சம்மந்தப்பட்ட விரைவான தன்னிச்சையான கண் அசைவுகள் ஆகும். இது யாருக்கெல்லாம் ஏற்படும்? காரணங்களும் அறிகுறிகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிஸ்டாக்மஸ் என்பது கண்களின் கட்டுப்பாடற்ற தன்னிச்சையான பக்கவாட்டு, மேல், கீழ், அசைவுகளை குறிக்கும் ஒரு சொல். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு பொருளின் மீது அல்லது செயலின் மீதும் கவனம் செலுத்துவது கடினம். குழந்தைகளின் கண்கள் நடுங்குவது பிறவி நிஸ்டாக்மஸ்சின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். மேலும் தலையில் ஏற்பட்ட காயம் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாலும், அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பெரியவர்களுக்கும் இந்தக் குறைபாடு ஏற்படலாம்.
அறிகுறிகள்:
மங்கலான அல்லது நிலையற்ற பார்வையினால் இவர்கள் தொலைவில் உள்ள பொருள்களின் மீது கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகும்.
பிரகாசமான வெளிச்சமான சூழல்களில் கண்கள் கூசும். இதனால் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.
பலருக்கு தலை சுற்றல் ஏற்படும். தொடர்ந்து வாகனம் ஓட்டுவது, புத்தகம் படிப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாது.
குழந்தைகளுக்கு கண்கள் நடுங்குவது ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். விரைவிலேயே கண் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களால் இருட்டில் பார்க்க முடியாது. இந்த நோய் உள்ளவர்கள் தங்களை அறியாமலேயே தலையை சாய்த்து அல்லது திருப்பி பார்ப்பார்கள். தலை நேராக இல்லாமல் சாய்ந்த நிலையில் இருக்கும்.
காரணங்கள்:
பிறவியிலேயே ஏற்படும் நிஸ்டாக்மஸ்:
இது பிறந்து ஆறு வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படலாம். இதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. மரபுரிமை காரணமாக இருக்கலாம். இது பிறவியிலேயே ஏற்படும் பிற கண் நோய்களுடன் தொடர்புடையது. பிறவிக் கண்புரை, வளர்ச்சியடையாத பார்வையின் நரம்புகள், தோல் முடி மற்றும் கண்களில் நிறமே இல்லாத அல்பேனிசம் நோய், குறுக்கு கண்கள், கடுமையான கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனையும் சேர்ந்தே வரும்.
வாழ்க்கையின் இடையில் உருவாவது:
இதனால் பக்கவாதம், மல்டிபிள் மூளைக் கட்டிகள், தலையில் காயங்கள், மத்திய நரம்பு மண்டலத்தில் சில நோய்கள், உள் காதுகளில் பிரச்சனை போன்றவை, வலிப்புக்கான எதிர்ப்பு மருந்துகள், மயக்க மருந்துகள் உட்கொண்டாலும், மது போன்ற போதைப்பொருள் பயன்பாடுகளும் இந்த நோய்க்கு வழிவகுக்கும்.
சிகிச்சை முறைகள்:
பிறவியிலேயே நிஸ்டாக்மஸ் ஏற்பட்ட குழந்தைகளுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. ஆனால் பல்வேறு சிகிச்சைகள் பார்வையை மேம்படுத்த உதவும்.
விட்டமின் குறைபாடு அல்லது சில நரம்பியல் நிலைமைகள் காரணமாக இருந்தால் அதற்கு சிகிச்சை செய்து இந்த நோயை சரிப்படுத்தலாம் அல்லது மேம்படுத்தலாம்.
கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் பார்வைத் தெளிவை மேம்படுத்த உதவும். சில நேரங்களில் கண் அசைவுகளின் தீவிரத்தையும் குறைக்க உதவும்.
தலை சாய்வதை குறைத்து காட்சி வசதியை மேம்படுத்த பிரிசம் லென்ஸ்களும் பயன்படுத்தப்படலாம்.
கண் தசைகளில் போடப்படும் சில ஊசிகள் தற்காலிகமாக கண்ணசைவுகளை குறைக்கலாம். கண் தசை அறுவை சிகிச்சை சிலருக்கு ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் இது அந்த நோயை குணப்படுத்தாது. கண் தசைகளை மைய நிலைக்கு மாற்றுவதை சரிசெய்யும். இதன் மூலம் தலை சாய்வதை குறைத்து காட்சிகளை கொஞ்சம் சரியாக பார்க்க முடியும்.
பெரிய அச்சுப் புத்தகங்கள், லென்ஸ்கள், அதிகரித்த வெளிச்சம் போன்றவை குறைந்த பார்வை திறன் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைப்பது சில நேரங்களில் இந்த நோயின் தீவிரத்தை குறைக்க உதவும். அதனால் இந்த நோய் உள்ளவர்கள் சரியான கண் மருத்துவர் அல்லது நரம்பியல் கண் மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்.