
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதில் மனநலன் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான மனநலம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மோசமான மனநலம் காரணமாக ஒருவருக்கு முதலில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் நாளைடைவில் அதிகரித்தால் , அது உடலில் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து இரைப்பை புண் , குடல் புண் ஆகியவற்றை ஏற்படுத்தி உணவு செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிக்கிறது.
மன அழுத்தம் அதிகரித்தால் , ஒருவருக்கு இரத்த அழுத்தமும் அதிகரிக்கக் கூடும் , அதன் விளைவாக உடல் உறுப்புகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக முடியும். இது அனைத்திற்கும் மூலமாக மன அழுத்தமே காரணமாக உள்ளது. மனதினை ஒருவர் கட்டுப்படுத்தி விட்டால் உடலினை ஆரோக்கியமாக பராமரிக்கலாம் . மனதினை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த இந்திய ரிஷிகள் கண்டுபிடித்த ஒரு பயிற்சி தான் யோகா. யோகா உடற்பயிற்சியை தினமும் பின்பற்றி வந்தால் பல நோய்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.
மகப்பேறு காலத்தில் பெண்களின் மனநிலை அடிக்கடி மாறுவதால் அவர்கள் சில பயிற்சிகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கலாம். அவர்களுக்கான சில பயிற்சிகளையும் இங்கு பார்ப்போம்.
ஆரம்பநிலை யோகா:
மனநலம் சிறக்க யோகாவின் ஆரம்பநிலை பயிற்சியான பிராணாயாமம் மற்றும் சில மூச்சுப் பயிற்சிகளை செய்யலாம் .அது போல அமைதியான இடங்களில் அமர்ந்து இருந்து தியானம் செய்வதும் யோகாவின் ஒரு பயிற்சியாக உள்ளது. இது மனதினை கட்டுப்படுத்துவது முதல் பாடமாக வைத்திருக்கிறது. பிராணாயாமம் பயிற்சி செய்யும் போது மூச்சு முழுவதும் உள் வாங்கப்பட்டு நுரையீரலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கிறது. இதனால் ஆக்சிஜனேற்றம் அதிகரித்து உடல் முழுக்க இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மலாசனா:
இந்த ஆசனம் பெண்களின் இடுப்பு பகுதிகளுக்கு அதிக வலுப் பெற செய்யலாம். இதை கர்ப்ப காலத்திற்கு முன்பு தினசரி பெண்கள் பயிற்சி செய்யலாம்.இந்த ஆசனம் பெண்களின் கருவுறுதல் தன்மையை விரைவாக மாற்ற உதவும் . இரு கைகளையும் கூப்பிய படி நேராக நின்று பின்னர் அப்படியே தரையில் அமர்வதை போல இறங்கி மீண்டும் மேலே எழுந்து நேராக நிற்கும் ஆசனமாகும்.
மண்டியிட்டு அமர்ந்த நிலை:
பெண்களின் மகப்பேறு காலத்தில் அதிகம் உடலை வருத்தாத எளிய சிறிய பயிற்சிகளை செய்யலாம் .இடுப்பு எலும்புகளை பலப்படுத்தவும் , தசைகளை தளர்வாக வைக்கவும் சில யோகப் பயிற்சிகளை செய்யலாம் .அதே வேளையில் கடினமான யோகா பயிற்சிகளை இந்த காலக் கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டாம். இரண்டு கால்களிலும் முட்டி போட்டு , அப்படியே பின்புறம் சாய்ந்து பாதங்களில் மீது , பின்புறம் படும் படி அமர்ந்து உட்காரவும் . கைகள் இரண்டையும் நேராக நீட்டி பின்னர் கீழே இறக்கி தொடையில் படும்படி வைக்கவும். இதை 5 நிமிடம் வரை செய்யவும்.
தேவி போஸ்:
இந்த யோகப்பயிற்சி பிரசவ காலத்தில் அதிக வலியை குறைக்கும். கால்களுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் பலத்தினை கொடுக்கக் கூடியது. அரை மடியில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் நன்றாக அகல வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்காமல் 'L 'வடிவத்தில் மடக்கி மேல தூக்கவும். இப்போது இரு கைகளும் 'ப' வடிவத்தில் தோன்றும். இரு கால்களும் கவிழ்த்த ' ப' வடிவத்தில் இருக்கும். இப்போது 5 நிமிடம் ஆழமாக சுவாசிக்கவும். இது போன்ற பயிற்சிகளின் உடலை மட்டுமல்லாது மனதையும் இதமாக வைக்கும்.