பெரும்பாலான மக்கள் சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு மெல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் கூட, சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு போடுவது நடைமுறையாக உள்ளது.
அதே நேரத்தில் வெற்றிலையை சோம்புடன் சேர்த்து மென்றால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வெற்றிலை எப்போதும் செரிமானத்திற்கு உகந்ததாக உள்ளது. அதுபோல சோம்பும் கூட செரிமான மண்டலத்தை ஊக்கப்படுத்தும் ஒரு ஆயுர்வேத பொருளாகவும் தினசரி சமையலில் உபயோகிக்கும் மசாலா பொருளாகவும் இருக்கிறது.
உணவை நன்கு உண்டவர்கள் சிலர் வெற்றிலை பாக்கு போடாமல் சோம்பு சாப்பிட விரும்புவார்கள். காரணம் சோம்பில் உள்ள சில என்சைங்கள் உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகின்றன. குறிப்பிட்ட அளவில் சோம்பு சாப்பிடுவது ஆரோக்கியமாக இருந்தாலும் அது வெற்றிலையுடன் சேரும்போது என்னென்ன பயன்கள் தருகிறது என்பதை பார்ப்போம்.
வெற்றிலையில் கால்சியம், வைட்டமின் சி, நியாசின் மற்றும் கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் அதில் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. வெற்றிலையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன.
சோம்பில் கால்சியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. சோம்பிலும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இந்த இரண்டு உணவுப் பொருட்களும் எதிரெதிர் வினைகளை புரியாது என்பதால் ஒன்றாக சாப்பிடலாம். இது ஒன்றாக சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு சற்று அதிகமான நன்மைகளை தருகிறது. சோம்பில் ஏராளமான இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. வெற்றிலையுடன் சோம்பு சேர்த்து சாப்பிடும் போது இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி இரத்த சோகையை போக்குகிறது.
செரிமானத்திற்கு உதவும்:
வெற்றிலை மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் அது செரிமானத்தை விரைவு படுத்தும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை பலப்படுத்துவதோடு, அது தொடர்பான பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே நேரத்தில் சோம்பில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அஜீரணம், இரைப்பை அழற்சி, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற தொந்தரவுகளை சரி செய்யும்.
வாய் துர்நாற்றத்தை போக்கும்:
வெற்றிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் சோம்பு உள்ள எண்ணெய் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. இதனால் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியும். அதன் காரணமாக வாய் துர்நாற்றம் நீங்கும். இந்த வகையில் வாய் துர்நாற்றத்தை போக்கி வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் வாய் வழி மூலம் பரவும் தொற்றுக்களை தடுக்கிறது. சோம்பு எப்போதும் சுவாசத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் பொருளாக உள்ளதால் வாயிலிருந்து நல்ல மனத்தை உருவாக்குகிறது.
சளி நீக்கி:
பாரம்பரியமிக்க சித்த வைத்திய முறைகளில் வெற்றிலையை சளி நீக்கியாக பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் தலைவலியை போக்கவும் வெற்றிலையை பயன்படுத்துகிறார்கள்.
வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் மூட்டு வலி, தலைவலி மற்றும் தசை வலியைக் குறைக்க உதவுகின்றன. வெற்றிலையில் சோம்பு சேர்த்து சாப்பிடும் போது விரைவாக சளியை போக்குகிறது. மேலும் இருமல் வருவதையும் தடுக்கிறது.