உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், இரத்த சோகையை குணப்படுத்துவதிலும் சிறந்தது பீட்ரூட். சர்க்கரை வடிவில் கார்போஹைட்ரேட்களும், சிறிதளவு புரோட்டீனும், கொழுப்பும் இதில் உள்ளன. இது இயற்கை சர்க்கரை நிறைந்த ஒரு உணவாகும். பீட்ரூட்டில் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், சல்பர், குளோரின், அயோடின், இரும்பு, தாமிரம், வைட்டமின் பி12, நியாசின் மற்றும் பி6 ஆகியவை உள்ளன.
பீட்ரூட் சாறில் எளிதில் ஜீரணமாகக்கூடிய கார்போஹைட்ரேட்கள் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை நீங்கள் வறுவல், பொரியல், சாறு பிழிந்து என எண்ணற்ற வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். இதன் சுவை மற்றும் மணம் உங்களைக் கவர்வதாக இருக்கும். இதில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதுவே இதற்கு சூப்பர் ஃபுட் உணவு வகைகளில் ஒன்றாகும் தகுதியை தந்துள்ளது.
பீட்ரூட் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இதில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இரத்த அழுத்தத்தை குறைக்கும். உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது, ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது.
இதில் உள்ள இயற்கை நைட்ரேட்கள், உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. உங்கள் தசைகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலில் சக்தியை அதிகரிக்கிறது. இது நீங்கள் தொற்றுகளில் இருந்து விரைவாக குணமடைய உதவுகிறது. நீங்கள் ஒரு அத்தலட்டாவோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் நபராகவோ இருந்தால், நீங்கள் உங்கள் உணவில் பீட்ரூட்டை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். கொப்பளங்கள், சரும எரிச்சல், பரு உடைதல் போன்றவற்றுக்கு வெளி மருந்தாக இது உதவுகிறது.
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன. அதை உடல் நைட்ரிக் ஆசிட்களாக மாற்றுகிறது. இது உங்கள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன்கள், உங்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது. இது உங்கள் செல்களை சேதமடைவதில் இருந்து காக்கிறது. பீட்ரூட், லோ கிளைசெமின் இண்டக்ஸ் உணவுகளில் உள்ளது. நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டது. இது உங்கள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
பீட்ரூட் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை அடித்து வெளியேற்றி உங்கள் கல்லீரலை பாதுகாக்கிறது. அதோடு உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகத்தையும், பித்தப்பைகளையும் சுத்தப்படுத்துகிறது. அசிடோலிசை எதிர்க்கிறது. உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மஞ்சள்காமாலை, ஹெபடைடிஸ், நாஸியா, பித்தம், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஏற்படும் வாந்தி போன்றவற்றை குணப்படுத்த உதவும். வயிற்றுப்புண், மலம் கழிக்க சிரமம், மூலநோய், இதய நோய்களுக்கும் உதவுகிறது.
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு பருகுவதால் வயதான காலத்தில் வரும் ஞாபக மறதி நோயை தவிர்க்கலாம் என்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள். அதோடு பீட்ரூட் ஜூஸ் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது என்கிறார்கள்.
உடலுக்கு உடனடி நார்ச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமா? உடனே பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுங்கள் என்கிறார்கள். 200 கிராம் பீட்ரூட்டில் ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 20 சதவீதத்தை பெற்று விடலாம் என்கிறார்கள். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினசரி உணவில் சிறிதளவு பீட்ரூட்டை சேர்த்துக்கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.
பீட்ரூட்டிற்கு சிவப்பு நிறத்தைத் தரும் நிறமி புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் என்கிறார்கள். மற்ற எந்தவிதமான காய், பழங்களைக் காட்டிலும் இரத்த அழுத்தத்தை 3 மணி நேரத்தில் 10 பாயிண்ட் குறைப்பது பீட்ரூட் சாறு மட்டும்தான் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பீட்ரூட்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.