
நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. உடலின் அனைத்து முக்கிய செயல்பாடுகளுக்கும், செரிமானம் முதல் ரத்த ஓட்டம் வரை, நீர் அத்தியாவசியம். "தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்பது பொதுவா கூறப்பட்டாலும், சிலர் மூன்று லிட்டர் அல்லது அதற்கு மேலும் தண்ணீர் அருந்தலாமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். இந்த அளவு நீர் அருந்துவது உண்மையில் உடலுக்கு நன்மை பயக்குமா, இது பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக, ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு நன்மை பயக்கும் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடலின் நீர்ச்சமநிலையைப் பராமரித்து, உடலின் செயல்பாடுகளைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன் முதன்மையான நன்மை என்னவென்றால், உடல் உறுப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதாகும். குறிப்பாக, சிறுநீரகங்கள் நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் போதுமான நீர் தேவை. அதிக நீர் அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
மேலும், போதுமான நீர் அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். வறண்ட சருமம், பொலிவின்மை போன்ற பிரச்சினைகளைத் தடுத்து, சருமத்தை ஈரப்பதத்துடன், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது வயதான தோற்றத்தை தாமதப்படுத்தி, சருமத்திற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
செரிமான மண்டலத்திற்கும் நீர் மிகவும் முக்கியம். இது உணவுப் பொருட்களை உடைத்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளைத் தடுக்கவும், குடல் இயக்கத்தைச் சீராக்கவும் போதுமான நீர் குடிப்பது அவசியமாகும்.
உடல் எடையைக் குறைப்பதிலும் நீர் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உணவு உண்பதற்கு முன் தண்ணீர் அருந்துவது பசியைக் கட்டுப்படுத்தி, அதிக உணவு உட்கொள்வதைத் தவிர்க்க உதவும். மேலும், இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்படுவதைத் தூண்டும்.
இருப்பினும், அனைவருக்கும் ஒரே அளவு தண்ணீர் தேவைப்படாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவரின் வயது, பாலினம், உடல் எடை, உடல் உழைப்பு, காலநிலை மற்றும் உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடும். உதாரணத்திற்கு, அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், சூடான தட்பவெப்ப நிலையில் வாழ்பவர்கள் அல்லது காய்ச்சல் போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு அதிக நீர் தேவைப்படும்.
அதே சமயம், அதிகப்படியான நீர் அருந்துவதும் சில சமயங்களில் ஆபத்தாக முடியலாம். Water Intoxication எனப்படும் இந்த நிலையில், ரத்தத்தில் சோடியம் அளவு குறைந்து, தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால், இது மிகவும் அரிதான ஒரு நிலை. பெரும்பாலும் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மட்டுமே நிகழும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)