
தண்ணீர் பற்றாக்குறை என்பது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாத நிலையை குறிக்கும். இது உலகம் முழுவதும் பல பகுதிகளில் காணப்படுகிறது, மேலும் தண்ணீர் பற்றக்குறை குடிநீர் பற்றாக்குறை, சுகாதார பிரச்சனைகள் மற்றும் விவசாயத்தில் பாதிப்பு போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
பூமியில் 70 சதவீத பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் 3 சதவீதம் மட்டுமே உயிரினங்கள் குடிக்க உதவும் நன்னீராக காணப்படுகிறது. இதிலும், 3-ல் 2 பங்கு உறைந்த பனிப்பாறைகளில் அல்லது மனித பயன்பாடுகளுக்கு கிடைக்காத இடங்களில் தேங்கி நிற்கிறது.
இன்றைய நிலவரப்படி, உலகின் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. உலகளவில், பல்வேறு இடங்களில் எண்ணற்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிப்பதால், தண்ணீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, இது நீர் ஆதாரங்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
நீர் பற்றாக்குறை என்பது உலகளாவிய பிரச்சினையாகும். இது மனித நடவடிக்கைகளால் மேலும் தீவிரமடைகிறது. காலநிலை மாற்றம், மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை தண்ணீர் பற்றாக்குறையை மோசமாக்குகின்றன.
ஆறுகளில் மணல் அள்ளுவது, மலைகளை உடைப்பது, காடுகளை அழிப்பது போன்ற மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் வறண்டு போகின்றன. தற்போது உலகில் பாதிக்கும் மேல் ஈர நிலங்கள் மறைந்துவிட்டன. மழை தரும் மரங்களை நடுதல், ஆறுகளை பராமரித்தல், மலைகளை காத்தல், மழைநீரை சேமித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நீரின் சேமிப்பு அளவை உயர்த்த முடியும்.
ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு உலக அளவில் தற்போதைய நுகர்வு விகிதத்தில் தண்ணீரை பயன்படுத்துவது தொடரும் நிலையில், 2025-ம் ஆண்டுக்குள், உலக மக்கள்தொகையில் 3-ல் 2 பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், வரும் தசாப்தங்களில் உலகளாவிய நீர் நெருக்கடி மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக சுமார் 700 மில்லியன் மக்கள் இடம்பெயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
சுமார் நான்கு பில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை அனுபவிப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றம், மனிதகுலத்தின் முக்கிய ஆபத்துகளில் ஒன்றாக நீர் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, உலகில் இருக்கும் தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இதில், சுமார் 60 சதவீதம் தவறான கசிவு நீர்ப்பாசன முறைகள், திறமையற்ற பயன்பாட்டு முறைகள் மற்றும் சூழலுக்கு பொருந்தாத பயிர்களை பயிரிடுதல் ஆகியவற்றால் வீணடிக்கப்படுகிறது.
இந்த வீணான நீர் பயன்பாடு விவசாயத்திற்கு தண்ணீர் தரும் ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர்நிலைகளை வறண்டு போக செய்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய ஒரு அறிக்கையில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உட்பட அதிக அளவு உணவை உற்பத்தி செய்யும் பல நாடுகள் தங்கள் நாட்டில் கிடைக்கும் நீர் வளத்தை பெருமளவு பயன்படுத்தி விட்டன என்றும், இது தொடர்ந்தால் வறட்சியை நோக்கி இந்த நாடுகள் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.