

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பருப்பு வகைகள் அத்தியாவசியமானவை. ஒவ்வொரு பருப்பு வகையிலும் ஏராளமான புரதங்களும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பி உள்ளன. என்னதான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அவற்றை சரியான அளவில் உண்ண வேண்டும், அதேபோல் சரியான முறையில் உண்ண வேண்டும். அதிக புரதம் மிகுந்த கொண்டைக் கடலையை (chickpeas) உப்பில் ஊற வைத்து வறுத்து உப்புக்கடலையாக விற்பனை செய்கின்றனர். இதில் உள்ள உப்பு , இரட்டை ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் அறிவதில்லை.
ஊரில் பலரும் வேர்கடலையை சாப்பிட்டால் தான் கொழுப்பு ஏறி உடல் ஆரோக்கியம் கெடும் என்றும், அதற்கு மாற்றாக கொண்டைக் கடலையை சாப்பிட்டால் நன்மைகள் ஏற்படும் என்றும், தவறாக நினைக்கின்றனர்.
கொண்டைக் கடலைகளில் சில நன்மைகள் இருந்தாலும் அதன் அதிகப்படியான நுகர்வு பித்தப்பைக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவில் பித்தப்பைக் கற்கள் மற்றும் பித்தப்பை புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக இருப்பதற்குக் காரணம் அதிக கொண்டைக்கடலை உட்கொள்ளல் மற்றும் வேதியியல் பண்பு மிகுந்த குடிநீர் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆயுர்வேதத்தின் படி கொண்டைக்கடலை அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவுப் பொருளாக இருந்தாலும், அது அதிக வறண்ட தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த வறண்ட தன்மைதான் கொண்டைக் கடலையின் முக்கிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இதனால் கொண்டைக் கடலையை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கிறது. அதன் கடினமான அமைப்பை உடைத்து, செரிமானம் செய்ய இரைப்பை மற்றும் குடல் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
இதனால், குடலானது மற்ற உணவுகளைவிட அதிக ஈரப்பதத்தை உள் உறுப்புகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. உணவின் செரிமானத்திற்காக உடலில் இருந்து தேவைக்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால், உடலில் உள்ள அத்தியாவசிய நீர்ச்சத்துக் குறைகிறது. இதன் காரணமாகவே, கொண்டைக்கடலை சாப்பிட்ட பிறகு பலருக்கும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற செரிமானப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
பித்தப்பையின் வேலை பித்தத்தை சுரந்து குடலில் உள்ள கொழுப்பை உடைத்து, அதை ஜீரணிக்க வைக்கிறது. உண்ணும் உணவில் கொழுப்பு சத்து இருந்தால் மட்டுமே பித்தப்பையானது பித்தத்தை சுரக்கிறது. கொண்டைக் கடலையில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவாக இருக்கிறது. இந்த காரணத்தினால் கொண்டைக் கடலை அதிக அளவில் உட்கொள்ளப்படும்போது, அதில் இருந்து கொழுப்பு வெளியிடப்படுவது இல்லை.
பித்தப்பை பித்தத்தைச் சுரந்து வெளியேற்ற வேண்டிய அவசியமில்லாமல் தன் செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. இதனால், பித்தம் பித்தப்பையிலேயே தேங்கி, குவிகிறது. இந்தத் தேங்கிய பித்தமானது கொண்டைக்கடலையின் வறட்சி குணம் காரணமாக மெதுவாக அதன் நீரை இழந்து, இயற்கையாகவே வறண்டு கெட்டியாகி, காலப்போக்கில் கற்களாக (Gallstones) மாறத் தொடங்குகிறது.
இந்த செயல்முறையின் மூலம் பித்தப்பை கற்கள் உருவாவதில் கொண்டைக்கடலையின் பங்கை புரிந்து கொள்ளலாம். இது போன்ற காரணங்களால் கொண்டைக் கடலை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக தென்னிந்தியர்கள் கொண்டைக் கடலையை மாதம் சிலமுறை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கொண்டைக் கடலையை சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் கெடுதல்கள் இன்றி இருக்கலாம். கொண்டைக் கடலையைத் தனியாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக அதனுடன் புதினா, கொத்தமல்லித் தழை, கேரட், வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற ஈரப்பதம் மிகுந்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
அவற்றை சுண்டலாக செய்து வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டால் , வேர்க்கடலையில் உள்ள கொழுப்பு சத்துகள் சேர்ந்து பித்தத்தை உற்பத்தி செய்ய தூண்டுதலாக இருக்கும். கொண்டைக் கடலை கிரேவியில் தேங்காய் பால் சேர்த்து சமைத்தால், உணவில் சிறிது கொழுப்பு சத்து கூடும். இதன் காரணமாக பித்தப்பையின் வேலை சரியாக நிகழும்.