உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடுவது பலருக்கு இருக்கும் ஒரு பழக்கமாகும். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இனிப்பு உணவுகள் நம் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன? அவை நமது உடல் எடையை அதிகரிக்கச் செய்வது உண்மையா? இவற்றைப் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பதிவில் உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடுவதன் நன்மை, தீமைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. சர்க்கரை நம் உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்கு கொண்டு சென்று ஆற்றலாக மாற்றுகிறது. எனவே, அதிக அளவு சர்க்கரை உட்கொள்ளும்போது இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை திடீரென குறைத்து மீண்டும் சர்க்கரையை அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும்.
உணவுக்குப் பின் அதிக அளவில் இனிப்பு சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அவை வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, கொழுப்பு சேர்வதை அதிகரிக்கின்றன. இனிப்பு உணவுகள் பொதுவாக கொழுப்பு மற்றும் அதிக கலோரி நிறைந்தவை. இவை அனைத்தும் ஒன்றிணைந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
அதிகமாக இனிப்பு சாப்பிடுவது வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வாய்வழி பாக்டீரியாக்கள் சர்க்கரையை உடைத்து அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த அமிலம் பற்களின் எனாமலை அரித்து பல்சிறிவு ஏற்பட வழிவகுக்கும்.
உணவுக்குப் பின் இனிப்பு உட்கொள்வது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நீண்ட காலமாக அதிக அளவு சர்க்கரை உட்கொண்டு வந்தால், இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை ஏற்பட்டு நீரிழிவு நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை ரத்த கொழுப்பு அளவை அதிகரித்து, ரத்த நாளங்களை அடைத்து, இதய நோயை ஏற்படுத்தலாம்.
எனவே, உணவு அருந்திய பின் எப்போதும் அதிகமாக இனிப்பு உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு உணவுக்கு பின் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் பழங்கள், டார்க் சாக்லேட், தயிர், பருப்புகள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.