பொதுவாக, ரேஷன் கடைகளில் கிடைப்பது புழுங்கல் மற்றும் பச்சரிசிகள் ஆகும். இதில் தனியாக எந்த வெரைட்டியும் கிடையாது. தமிழ்நாடு அரசு நெல் மணிகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து ஒட்டுமொத்தமாக வாங்குவார்கள். அது மில்லில் கொடுக்கப்பட்டு புழுங்கல் அரிசியாக மாற்றப்படும்.
ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியில் குறிப்பிட்ட வகை என்று எதுவுமில்லை. பிறகு அதற்கு மட்டும் ஏன் தனி குணாதிசயம் இருக்கிறது என்று கேட்டால், அதனுடைய Processing செய்யும் முறை என்று கூறப்படுகிறது.
பச்சரிசியில் அதனுடைய உமி, தவிடு போன்றவற்றை நீக்கி விடுவதால், வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருக்கும். ஆனால், புழுங்கல் அரிசியில் நெல்மணிகளை முதலில் வேக வைக்கும்போது தவிட்டில் இருந்து சத்துக்கள் அரிசிக்கு போகும். பிறகு அதை மில்லில் கொடுத்து அரிசியாக மாற்றுவார்கள். ஆகவே, அதில் சத்துக்கள் சற்று அதிகமாக இருக்கும்.
பொதுவாக, அரசு உணவு வினியோகத்துறையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த வருடம் வாங்கும் அரிசியை ஸ்டாக் வைத்துக்கொள்வார்கள்.ஏனெனில், வெள்ளம், பஞ்சம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது உணவு இல்லாமல் போய்விடக்கூடாது என்று இரண்டு அல்லது மூன்று வருடம் அரிசியை வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள்.
எனவே, நமக்கு இப்போது ரேஷனில் கிடைக்கும் அரிசி இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு முன் விளைந்ததாக இருக்கும். ஆகவே, அந்த அரிசி இரண்டு வருடம் சேமித்து வைத்த காரணத்தால், சற்று கடினமானதாக மாறிவிடும். சாதாரணமாக அரிசி மிருதுவாக இருந்தால் கடித்து சாப்பிட சுலபமாக இருக்கும். அதனால் நமக்கே தெரியாமல் நிறைய சாப்பிட்டு விடுவோம்.
இதுவே, ரேஷன் அரிசி சற்று கடினமாக இருப்பதால் நம்மையே அறியாமல் அதை குறைவாக சாப்பிடும் காரணத்தால்தான் அது உடல் எடை குறைக்க, சர்க்கரை அளவை கொஞ்சம் குறைக்க உதவுகிறது. எனவே, ரேஷன் அரிசி தனி ரகம் கிடையாது. அதை மக்கள் தாராளமாக வாங்கி சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.