சிவப்பான காய்கறிகள் மற்றும் பழங்களான மாதுளை, பீட்ரூட் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் நிறத்தை அது சம்பந்தமான நோய்கள் அல்லது நன்மைகளோடு ஒப்பிடுவது பிடிக்கும். உதாரணத்திற்கு, மஞ்சள் காமாலை நோய்க்கு மஞ்சள் சாப்பிடக் கூடாது, முட்டை மஞ்சள் கரு சாப்பிடக் கூடாது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அதனுடைய மஞ்சள் நிறத்தை ஒப்பிட்டு இப்படிச் சொல்வதுண்டு.
நம்முடைய இரத்தம் சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிவப்பான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் இரத்தம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின் என்ற காம்பவுன்ட் அதில் இருப்பதாலேயாகும். மாதுளம் பழம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் அதில் Anthocyanin என்னும் பிக்மெண்ட் இருப்பதால் ஆகும். பீட்ரூட் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு Betalain என்னும் பிக்மெண்ட் காரணமாகும்.
100 கிராம் மாதுளம் பழத்தில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து 0.3 மில்லி கிராம் ஆகும். ஆகவே, ஒரு கிலோ மாதுளை சாப்பிட்டால்தான் 3 மில்லி கிராம் இரும்புச்சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 15 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. 100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
எனவே, இந்தப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இரும்புச்சத்து குறைவாகவே உள்ளது. இதனுடைய நிறத்திற்கும் இரும்புச் சத்திற்கும் சம்பந்தம் இல்லை. பெரும்பாலான பேரீச்சம் பழத்தில் 100 கிராமில் 1 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. ஆகவே, இதையும் கிலோ கணக்கில் சாப்பிட்டால்தான் ஒரு நாளைக்கு தேவையான இரும்புச் சத்து நமக்குக் கிடைக்கும்.
அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் மட்டன், ஈரல் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கட்டு கீரைகள், முளைக்கட்டிய பச்சை பயறுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதில் போதுமான அளவில் இரும்புச் சத்துகள் இருக்கின்றன.
எனவே, இரும்புச் சத்துக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் நிறங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நல்ல உணவுகள், காய்கறிகள், பழங்களை தேவையான அளவு எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். முயற்சித்துப் பாருங்கள்.