
அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, நம்மால் பிரிந்தே இருக்க முடியாத ஒரு பொருளாக, வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது அலைபேசி எனப்படும் செல்போன். குழந்தை முதல் வயதானவர் வரை செல்போனில் தான் நேரங்களை கழிக்கிறார்கள்.
செல்போன் அறிமுகமான துவக்க காலத்தில் அதிலிருந்து வரும் கதிர்களால் சில பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கைகள் வந்தாலும், அதன் பின்னான அதிக பயன்பாடுகளால் அந்த எச்சரிக்கைகள் புறம் தள்ளப்பட்டது தான் உண்மை.
சிலர் தங்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செல்போனை பயன்படுத்தி ஆதாயம் பெறுகிறார்கள். ஆனால் சிலரோ அந்த செல்போனிற்கு அடிமையாகி, தங்கள் வாழ்வின் பெரும் பகுதியான நேரங்களை அதற்கு இறையாக்கி விடுகிறார்கள். இன்னும் சிலரோ கழிப்பறை செல்ல வேண்டிய நேரங்களில் கூட அதைப் பிரிந்து இருக்க முடியாமல் தங்களுடன் எடுத்துச் சென்று அதில் மூழ்குகிறார்கள். இந்த பதிவு அவர்களுக்கானதே!
கழிப்பறையில் செல்போன் உபயோகிப்பது தவறா? இப்படியும் ஒரு கேள்வியா என்று கேட்க தோன்றுகிறது இல்லையா?
கழிப்பறையில் செல்போன் உபயோகிப்பதனால் விளையும் பலன்கள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
1. கழிப்பறையில் செல்போன் பயன்படுத்தும் போது வரும் சாத்தியமான ஆபத்துகளில் முதன்மை பெறுவது பாக்டீரியா மாசுபாடு எச்சரிக்கை தான். பொதுவாகவே, கழிப்பறைகள் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம். அவை உங்கள் தொலைபேசிக்கு பரவி தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும்.
2. கழிப்பறையில் உள்ள ஈரப்பதம் தற்செயலாக விழும் நீர் சொட்டுகள் தொலைபேசியை சேதப்படுத்தும் வாய்ப்பு உண்டு.
3. கழிப்பறையில் உங்கள் தொலைபேசியைக் கையாண்ட பிறகு அதே கைகளில் உங்கள் முகம் அல்லது வாயைத் தொடுவது பாக்டீரியாவைப் பரப்பி சுகாதாரம் பாதிக்க வழிவகுக்கும்.
கழிப்பறையில் அவசியம் செல்போன் பயன்படுத்துவோர் இந்த பாதுகாப்பான வழிமுறைகளை கையாளலாம்.
உங்கள் சாதனத்தை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க நீர்ப்புகா தொலைபேசி உறையை பயன்படுத்துவது. கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் உங்கள் தொலைபேசியைக் கையாளுவதற்கு முன்பும் உங்கள் கைகளை நன்கு கழுவுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்க கிருமிநாசினி துடைப்பான் மூலம் தொலைபேசியை தவறாமல் சுத்தம் செய்வது முக்கியம்.
இன்றைய அவசர வாழ்க்கையில் நேரங்களை மதிப்பு மிக்கதாக ஆக்க கழிப்பறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது ஒரு வழியாக இருக்கலாம். சிலருக்கு நேரத்தைக் கடக்க அல்லது ஓய்வெடுக்கவும் காரணமாக இருக்கும். சிலர் இந்த நேரத்தை செய்திகளுக்கு பதிலளிக்க, மின்னஞ்சல்களைச் சரிபார்க்க அல்லது செய்திகளைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்தலாம்.
காரணம் எதுவாக இருப்பினும் கழிப்பறையில் செல்போனைப் பயன்படுத்துவது 'நல்லதா' என்பது அவரவர் சூழல், நேரங்கள், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பொறுத்தது எனலாம். கூடுமானவரை இதை தவிர்ப்பது நல்லது.
இருப்பினும், கழிப்பறையில் நீங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தும் அவசியம் இருந்தால், சுகாதாரத்தைப் பராமரிக்கவும், சாதனத்தைப் பாதுகாக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.