ஹார்வர்ட் விஞ்ஞானியான டாக்டர் வில்லி சூன் (Dr Willi Soon) (பிறப்பு 30-9-1965) கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு கணித சூத்திரம் நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.
விஞ்ஞானத்தின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டு பிரபஞ்சம் இருப்பதை க்ளோஸ்ட் ஸ்பேஸ்டைம் கர்வேச்சர் (Closed Spacetime Curvature) நிரூபிப்பதாக சூன் கூறியுள்ளார்.
டாக்டர் வில்லி சூன் ஒரு வான் இயற்பியல் (Astrophysicist) விஞ்ஞானி. மலேசியாவைச் சேர்ந்த இவர் ஹார்வர்ட் ஸ்மித்ஸோனியன் செண்டர் ஃபார் அஸ்ட்ரோ பிஸிக்ஸ் பிரிவில் நீண்ட காலம் ஆய்வு நடத்தியவர்.
நாம் நினைப்பதை விட அறிவியலும் இறை நம்பிக்கையும் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.
டக்கர் கார்ல்ஸன் நெட்வொர்க் (Tucker Carlson Network) தளத்திற்குக் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் கணித கொள்கைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் பிரபஞ்சமானது ஒரு குறிக்கோளுடனேயே படைக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை ஆதரிக்கின்றன என்றார்.
தனது கருத்தை ஆதரிக்கும் வகையில் அவர் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியான பால் டிரக் (Paul Dirac) 1928ல் ஆண்டி-மேட்டர் இருப்பதை கணிதத்தின் வாயிலாகக் கூறி இருப்பதை சுட்டிக் காட்டினார்.
ஆனால் டிரக்கின் கணக்கீடுகள் 1932ல் கார்ல் ஆண்டர்ஸன் என்ற விஞ்ஞானி போஸிட்ரானைக் கண்டுபிடித்த பின்னரேயே உறுதியானது.
இதுவே ஒரு அற்புதம் தான் என்றார் வில்லி சூன்.
அடுத்து கணித ஜியாமெட்ரியில் உள்ள மர்மங்களை, -குறிப்பாக புவி ஈர்ப்பு விசை இல்லாத ஸ்பேஸ்-டைமில் உள்ள க்ளோஸ் கர்வெச்சரில் உள்ள மர்மங்களை - அவர் வலியுறுத்திப் பேசினார்.
தனது ஆய்விற்கு ஆதரவாக அவர் விஞ்ஞானிகளான ஹெர்மேன் வெயில் மற்றும் ஜான் ஆர்சிபால்ட் வீலர் ஆகியோரின் ஜியாமெட்ரி கொள்கைகளை எடுத்துக்காட்டினார்.
தனது பேச்சின் முடிவில் விஞ்ஞானம் விளக்க முடியாத சில விஷயங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று கூறிய அவர் முத்தாய்ப்பாக தனது பேச்சை இப்படி முடித்தார்:
“சில சமயம் நாம் மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து தலையைத் தாழ்த்தி வணங்க வேண்டும். ஒருவேளை எப்போதும் இருக்கின்ற சில விசைகள் (forces) நமது வாழ்க்கைக்கு ஒளி காட்டும். கடவுளே ஒளியை நமக்குத் தந்துள்ளான். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதைப் பின்பற்றிச் செல்வது தான்!”
அறிவியல் வட்டாரத்தில் திகைப்பையும் விவாதத்தையும் இது கிளப்பி உள்ளதென்றாலும் இறைநம்பிக்கை உள்ளோரிடத்தில் இது மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
கடவுள் இருக்கிறார் என்பதை கணிதபூர்வமாக நிரூபித்த விஞ்ஞானி வில்லி சூனை உலகம் பாராட்டுகிறது!
நன்றி: ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா 13-3-2025 இதழ்