ஹேன்சன் நோய் என்று அழைக்கப்படும் தொழு நோய் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொழுநோய் முதன்மையாக மனித இடம் பெயர்வு, வர்த்தகம் மற்றும் அரசர்களின் படையெடுப்பு, ராணுவ வெற்றிகள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது. இது ஒரு ஆபத்தான நோயா? எளிதில் பிறருக்குப் பரவுமா? இந்த நோயைத் தடுக்க வழிகள் உண்டா என்பது போன்ற சந்தேகங்களுக்கு இந்தப் பதிவில் விடை காணலாம்.
தொழு நோய் ஏற்படுவது எப்படி?
மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் தொழு நோய் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியம் முக்கியமாக சருமம், நரம்புகள் மற்றும் சளி சவ்வுகளை பாதிக்கிறது. இது குளிர்ந்த வெப்பநிலையில் சிறப்பாக வளரும். இந்த பாக்டீரியாக்கள் மிக மெதுவாகப் பெருகும். பொதுவாக, 95 சதவீத மக்களுக்குத் தொழுநோய் ஏற்படுவதில்லை. மரபணு ரீதியாக தொழுநோயை எதிர்க்கும் சக்தி அவர்கள் உடலிலேயே இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது சில மரபணு மாற்றங்கள் போன்ற நோய் எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும் நிலைமைகள் தொழு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
தொழு நோயின் அறிகுறிகள்: மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்கிற பாக்டீரியாவின் தாக்குதலுக்குப் பிறகு உடலில் தொழு நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இதன் முதன்மையான அறிகுறிகள் சருமப் புண்கள்.
சருமப் புண்கள்: வெளிறிப்போன சற்றே சிவப்பான நிறத்தில் இருக்கும் சருமப் புண்கள் இதன் முதல் கட்ட அறிகுறி ஆகும். இவை உணர்வற்றதாக இருக்கும். மேலும், உடலில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் கடுமையான திட்டுக்கள் படியலாம். உணர்வின்மை காரணமாக வெப்பம், குளிர் அல்லது வலியை உணர முடியாமல் போகும். இதனால் காயங்கள் உண்டாகும். சருமம் தடிமனாகவும் கரடு முரடானதாகவும் மாறும்.
நரம்பு சேதம்: தொழுநோய், குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும். அந்தப் பகுதிகளை பலவீனப்படுத்தி கை, கால்களை உபயோகிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
கண் பார்வை பாதிப்பு: இந்த நோய் கண்களை பாதிக்கலாம். இது கண் வறட்சி அல்லது பார்வைக் குறைபாடுகளை உண்டாக்கும். இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்பு கூட நேரலாம். மூக்கில் அடைப்பு அல்லது இரத்தம் வரலாம்.
தசை பலவீனம்: தொழு நோய் தசைகளில், குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் பலவீனத்தை ஏற்படுத்தும். இதனால் அன்றாடப் பணிகளை செய்வது கடினமாகும்.
தொழு நோய் ஒரு தொற்று நோயா?
பொதுவாக, தொழு நோய் ஒரு தொற்று நோய் அல்ல. மிக எளிதில் பிறருக்குப் பரவுவது இல்லை. தொழு நோயாளியுடன் பேசுவது, கை குலுக்குவது, அருகில் அமர்வது போன்றவற்றின் மூலம் இது பரவாது. ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீண்ட காலம் தொடர்பு கொள்வதன் மூலம் பிறருக்குப் பரவும்.
நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும் மற்றும் அவருடன் நெருக்கமாக வாழ்வது போன்ற காரணிகள் மூலமும் பிறருக்கு தொழுநோய் பரவலாம். தொழுநோய் விலங்குகளிடமிருந்தும் மனிதர்களுக்குப் பரவுகிறது.
தொழு நோயை தடுக்க முடியுமா?
ஆரம்ப கால கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி உட்பட பல உத்திகள் மூலம் தொழு நோயைத் தடுக்கலாம். தொழு நோய் கண்டறியப்பட்டவுடன் சிகிச்சை தொடங்க வேண்டும். இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கலவைகளைக் கொண்டுள்ளது. தொழு நோயைத் தடுக்க தொழு நோய்க்கான குறிப்பிட்ட தடுப்பூசி எதுவுமில்லை என்றாலும் காச நோயைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் தடுப்பூசியை தொழு நோய்க்கு அளிக்கிறார்கள்.