குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய 6 விதிகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்: வீட்டில் உள்ளவர்களை அவர்களின் சின்னச் சின்ன செயல்களுக்காகப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் சந்தோஷம் கூடும். ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி உண்டு. நம் தோட்டத்தின் அழகு, அதில் எத்தனை பூக்கள் இருக்கின்றன என்பதில்தான் உள்ளது. நம்முடைய தினப்படி அருமையாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய அதில் எத்தனை பொன்னான தருணங்கள் இருந்தன என்பது முக்கியம். இவைதான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகும்.
2. பொறாமை கொள்ளாமல் இருப்பது: ஒருவரின் வளர்ச்சியில் மற்றொருவர் பொறாமை கொள்ளாமல் இருப்பது. கணவனோ, மனைவியோ இருவரில் ஒருவரிடம் இருக்கும் திறமையை, அவர்களின் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாமல் அவர்களிடம் இருக்கும் திறமையை பாராட்டக் கற்றுக்கொள்வது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
ஒருவரின் வளர்ச்சியில் மற்றொருவர் பொறாமை கொள்ளாமல் இருப்பது வாழ்வில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் கூட்டும். நான்தான் உயர்வு. நீ மட்டம் என்று ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருப்பது சிறந்தது.
3. மனைவி, மக்களை கிண்டல் செய்யாதிருப்பது: பெரும்பாலான குடும்பங்களில் பிரச்னைகள் உருவாக பெரியவர்களும் முக்கியக் காரணம். அவர்களின் குதர்க்கமான பேச்சின் மூலம் தம்பதியருக்குள் பிரச்னைகள் உருவாகக் கூடும்.
எனவே, தேவையற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மனைவி, மக்களை நான்கு பேர் முன்பு கிண்டல் செய்யாமல் இருப்பது அவர்களின் மனம் புண்படாமல் இருக்க உதவும். அத்துடன் அவர்கள் நம்மைக் கண்டால் வெறுப்படையாமல் இருக்கவும் உதவும். கோபத்திற்கோ, வெறுப்பிற்கோ இடம் தராமல் மனதை சமன் நிலை குலையாமல் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
4. சிக்கனம் தேவை இக்கணம்: குடும்பத்தில் சிக்கனம் என்பது மிகவும் அவசியம். வரவுக்கேற்ற செலவும், தேவையற்ற வீண் செலவுகளை குறைப்பதும், ஆடம்பரத்திற்காக தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக் குவிப்பதும் நம் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்கும். சிக்கனமாக இருப்பது வேறு; கஞ்சத்தனமாக இருப்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு சிக்கனத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளைப் போக்கி மகிழ்ச்சியை நிலைநாட்டும்.
5. பக்கபலமாக இருப்பது: குடும்பத்தின் ஆணிவேரான கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருப்பது குடும்பத்தில் அமைதியும் சந்தோஷத்தையும் நிலைநிறுத்த உதவும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் குடும்பத்தில் சந்தோஷத்தை மட்டுமே நிலைநிறுத்துவேன் என்ற உறுதி இருவருக்கும் வேண்டும்.
வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அவற்றையெல்லாம் சகஜமாக ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் அவர்களிடம் இருக்கும் குறைகளை பெரிதாக்காமல் பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
6. நம்பிக்கை மற்றும் தெளிவு: குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம். திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் தங்களுடைய மனநிலையை மேம்படுத்துவது நல்லது. வெளிநாட்டில் இருக்கும்பொழுது தன்னுடைய மனைவியை யாராவது தவறாக சொன்னால் அதை நம்பி தனது மற்றும் மனைவியின் நிம்மதியை குலைக்காமல் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கைக் கொள்வது மிகவும் அவசியம்.
அதேபோல், குறிக்கோளை அடைய வேண்டியதில் தெளிவும், ஒரே கருத்தும் இருப்பது அவசியம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் நம்மால் அதனை எளிதில் அடைய முடியும். மேலும், நம் குடும்பத்திற்கு எது தேவை, எது நல்லது என்பதை அறிந்து செயலாற்ற முடியும்.