
பீட்சா, பர்கர், சாண்விட்ச் போன்றவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள். இருப்பினும், அவை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வு, பீட்சா விரும்பிகளுக்கு சாதகமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது!
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆய்வில், பேக் செய்யப்பட்ட (Packaged Cereals) காலை உணவுகளை விட பீட்சா ஆரோக்கியமானது எனத் தெரியவந்துள்ளது.
ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ், சோக்கோஸ் போன்ற பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுகள் காலை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உணவுகளுடன் பால் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடும் வழக்கம் உண்டு. சில சமயங்களில் பழங்களும் சேர்த்து உணவாக உட்கொள்ளப்படுகிறது.
பீட்சா பொதுவாக துரித உணவுகளின் பட்டியலில் ஒன்றாக கருதப்படுகிறது. அதிக கலோரிகள், புரதச்சத்துக்கள் கொண்டது. இது கனமான உணவாக இருப்பதாலும், ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதாலும் இதனை மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் உணவாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால், தி டெய்லி மீல் அறிக்கையின்படி, காலை உணவாக பாலுடன், பேக் செய்யப்பட்ட (Packaged Cereals) காலை உணவுகளை உண்பதற்குப் பதில், ஒரு துண்டு பீட்சாவை சாப்பிடலாம். ஏனெனில், பால் மற்றும் அந்த தானியங்கள், கிட்டத்தட்ட ஒரு துண்டு பீட்சாவில் இருக்கும் அதே அளவு கலோரிகளைக் கொண்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், அவர்கள் பீட்சா சத்தான உணவு அல்ல. ஆனால், இந்த காலை உணவுகளுடன் ஒப்பிடும்போது பீட்சாவே காலை உணவுக்கு சிறந்தது. ஏனெனில், பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுகளில், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அல்லது அதிகப்படியான சர்க்கரை உள்ளன. எனவே, இதனுடன் ஒப்பிடும்போது, பீட்சாவில் உள்ள காய்கறிகள், புரோட்டின் போன்றவை உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதோடு, பசியையும் கட்டுப்படுத்துகிறது. எடை மேலாண்மைக்கு சிறந்தது. பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் ஏற்படும் சர்க்கரையின் அபாயத்தையும் குறைக்கிறது என்றும் விளக்குகிறார்கள்.
அதற்காக, அடிக்கடி (காலை உணவாக) பீட்சாவை வாங்கிச் சாப்பிடலாம் என அர்த்தமல்ல என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சீஸின் அளவைக் குறைத்தும், மைதாவிற்குப் பதில் கோதுமை மாவைப் பயன்படுத்தியும், காய்கறிகள் சேர்த்தும் ஆரோக்கியமான பீட்சாவை வீடுகளிலேயே செய்து சாப்பிடலாம். பீட்சாவுக்கு மாற்றாக, அதை விட ஊட்டச்சத்து நிறைந்த முழு தானியங்கள், நட்ஸ், விதைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், பால், பழச்சாறு போன்று காலை உணவுகள் நிறைய இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.