சோயா சங்க்ஸ் எனப்படும் சோயா பீன்ஸில் உடலுக்குத் தேவையான புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் பலருக்கு சோயா சங்க்ஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா? என்ற சந்தேகம் உள்ளது. இந்த பதிவில் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
சோயா சங்க்ஸ், சோயா பீன்ஸ் எனப்படும் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். கடலை பருப்பு உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போலவே இதிலும் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் சோயா பீன்ஸில் 20 முதல் 25 கிராம் புரதம் இருக்கிறது. இதுவே 100 கிராம் சோயா சங்க்ஸில் 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் இருக்கும் புரதச்சத்து காரணமாக சைவ உணவு உண்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். ஏனெனில் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சத்து அதிகமாக கிடைப்பதில்லை. அதே நேரம் புரோட்டீன்கள் அசைவ உணவிலேயே அதிகம் நிறைந்து காணப்படுவதால், சைவ உணவு விரும்பிகளுக்கு புரோட்டீன் உணவுகள் குறைவாகவே உள்ளது.
சோயா சங்க்ஸ் சாப்பிடுவதால் அதிக அளவு நன்மை இருந்தாலும், இதனால் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. சோயா சங்க்ஸில் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அதிக அளவு உள்ளது. எனவே ஆண்கள் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஆண்களின் உடலிலும் ஈஸ்ட்ரோஜன் சேர்ந்து, ஆண்களின் மார்பு சதையை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இதனால் ஆண்களின் உடல் அமைப்பிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடுமாம்.
இதில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் என்பதால் ஆண்கள் அதிக அளவில் சோயா சங்க்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டாம். சில ஆய்வுகளின் படி இதை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் எடையை நிர்வகித்து தசை வளர்ச்சியும் தூண்டுகிறதாம். எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சோயா சங்க்ஸ் சாப்பிடலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இதயத்துக்கு நன்மை பயக்கும்.
நமது தினசரி புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய சோயா பீன்ஸ் மிகவும் நல்லது. ஆனால் இதை அளவாக ஆண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது. சராசரியாக ஆண்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கிராம் வரை சோயா சங்க்ஸ் சாப்பிடலாம். இதில் வேறு எந்த விதமான கெட்ட விஷயங்களும் இல்லை. எனவே சோயா சங்க்ஸ் சாப்பிடுவது முற்றிலும் ஆரோக்கியமானதுதான்.