வயிறு உப்புசம் பலதரப்பட்ட நபர்களை பாதிக்கிறது. வயிறு மற்றும் குடலில் வாயு, காற்று அல்லது திரவங்கள் அதிகமாக சேரும் போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. வயிறு வீங்கி இருப்பது போல, வயிற்றில் ஒரு பலூன் இருப்பது போல மக்கள் உணர்வார்கள். சில நேரங்களில் வயிற்று வலி வாயுத் தொல்லை போன்றவற்றையும் ஏற்படுத்தும். அதிகமாக உண்பது ஒரு காரணமாக இருந்தாலும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவையும் வயிறு உப்புசத்திற்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
மன அழுத்தம் எவ்வாறு வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகிறது?
குடலின் செயல்பாடுகள் பாதிப்பு;
ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவருடைய உடலில் ரத்த ஓட்டம், செரிமான அமைப்பிலிருந்து திசை திருப்பப்படுகிறது. மனப்பதட்டத்தில் இருக்கும் நபர்கள் அதிகமான காற்றை உள்ளிழுத்துக் கொள்கிறார்கள். இது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி உப்புசத்தை உண்டாக்குகிறது. இதனால் வயிறு வீங்கியது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. குடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சாதாரண செரிமான செயல்முறைகள் சீர்குலைக்கப்படுகின்றன. மனப்பதட்டம் இரைப்பை குடல் இயக்கத்தை பாதித்து உடலை தற்காலிகமாக ஸ்தம்பிக்க செய்து விடும்.
மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள்:
மனப்பதட்டத்தில் அல்லது அழுத்தத்தில் இருக்கும் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக நாடுவார். கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளையும் ஆரோக்கியமற்ற இனிப்பு, உப்பு கலந்த உணவுகளையும் அதிகமாக உண்பார். இவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தம், உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையே உள்ள சமநிலையை சீர்படுத்துவதில் போராடும். அதன் விளைவாகவும் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.
சண்டையிடு அல்லது தப்பி ஓடு:
மனப்பதட்டம் ஏற்படும்போது உடல் சண்டையிடுதல் அல்லது தப்பி ஓடுதல் என்கிற நிலைக்கு சென்று விடுகிறது. அதாவது மன அழுத்தத்திலிருந்து தப்பியோடுதல், அல்லது அதை எதிர்த்துப் போராடுதல் என்கிற சிக்னலை மூளைக்கு அனுப்புகிறது. அப்போது அதை சரி செய்ய மனித உடல் குறிப்பிட்ட ரசாயனங்களை வெளியிடுகிறது. கார்டிசோல் மற்றும் அட்ரினல் போன்ற ஹார்மோன்கள் சுரந்து அவை சிறப்பு ரசாயனங்களை வெளியிடுகின்றன. மன அழுத்த ஹார்மோன் என்று அழைக்கப்படும் கார்டிசோலின் அளவு அதிகரிக்கும்போது செரிமான அமைப்பு உட்பட உடலில் உள்ள பல அமைப்புகளை பாதிக்கிறது. இது உணவு வயிற்றில் நீண்ட நேரம் தங்கி அதிக வாயுக்களை உருவாக்க வழிவகுக்கிறது. கார்டிசோல் செரிமான பாதையில் உள்ள தசைகளை சுருங்கச் செய்கிறது. இதுவும் வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கிறது.
வயிறு உப்புசம் யாரையெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ள நபர்கள்: இவர்களுக்கு அதிகமாக மனப்பதட்டம் மற்றும் மனச்சோர்வு இருக்கும். எனவே இவர்களுக்கு வயிறு உப்புசம் என்பது அடிக்கடி ஏற்படுகிறது.
மிக வேகமாக சாப்பிடுபவர்களுக்கு: உணவை மெல்லாமல் அவசரமாக உண்ணுபவர்களுக்கு காற்று உள்ளே சென்று வயிறு உப்புசம் ஏற்படும்.
பெண்கள்: பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு வயிறு உப்புசம் ஏற்படும்
உப்புசத்தை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. ராஜ்மா என்கிற பீன்ஸ் மற்றும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். வாயு உருவாவதற்கு வழிவகுக்கும்.
2. ப்ராக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அவையும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
3. ஆப்பிள்கள், பேரிக்காய், கொடி முந்திரி, பாதாமி போன்ற பழங்களில் பிரக்டோஸ் மற்றும் சர்பிடால் உள்ளன. இது வாயு உருவாவதற்கு வழிவகுக்கும்.
4. பால், சீஸ், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவை லாக்டோசை ஜீரணப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
5. பார்லி மற்றும் கம்பு போன்ற உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும்.