
அவலை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு, தோசை வார்க்கும்போது, கலந்து ஊற்றினால் சுவையான ஸ்பான்ஜ் தோசை ரெடி.
ரவா தோசைக்கு மாவு கரைக்கும்போது, இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கரைத்து தோசை வார்த்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.
நான்கு பங்கு அரிசியுடன் ஒரு பங்கு உளுத்தம் பருப்பு சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். திடீர் விருந்தினர்கள் வந்தால் திடீர் தோசை செய்து அசத்தலாம்.
தோசை மாவு தேவையை விட குறைவாக இருந்தால் அரிசி மாவு,தேங்காய், சிறிதளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து அப்பம்போல வார்க்கலாம்.
தோசை மாவு நீர்த்திருந்தால், பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து, அதனுடன் கலந்துவிட்டால் மேலும் நீர்த்துப்போகாது. புளிப்பும் தெரியாது.
தோசை மாவு புளித்துவிட்டால் ஒரு டம்ளர் பால் விட்டால் போதும். புளிப்புச்சுவை குறைந்துவிடும்.
தோசை மாவு குறைவாக இருந்தால், ரவையை வறுத்துக் கலந்து, சிறிது நேரம் ஊறிய பின் தோசை வார்த்தால் தோசை மொறு மொறு வென்று இருக்கும்.
தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக்கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் தோசை பட்டு பட்டாக ருசியுடன் இருக்கும்.
ரவையை உப்பு போட்டு பிசிறி வைத்து அதனுடன், அரைத்த உளுந்து மாவைச் சேர்த்து தோசை வார்த்தால் சுவை அள்ளும்.
கேரட், பீட்ரூட்டை சுத்தம் செய்து, துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கலர்ஃபுல்லாக இருப்பதுடன் சுவையும், சத்தும் அதிகரிக்கும்.
தோசைக்கு மாவரைக்கும்போது, அதில் இரண்டு வெண்டைக்காய்களைப் போட்டு அரைத்தால் தோசை தனி ருசியுடன் இருக்கும். உளுந்தும் அதிகம் போட்டு அரைக்கத் தேவையிருக்காது.
நாலு தம்ளர் கோதுமை மாவுக்கு, அரை தம்ளர் உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து கோதுமையுடன் கலந்து உப்பு போட்டுக் கரைத்து தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.
தோசைக்கு பச்சரிசியை பயன்படுத்தினால் அதை சிறிது வறுத்து, வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் தோசை மெத்தென்று இருக்கும்.
கோதுமை ரவையை ஒரு மணிநேரம் மோரில் ஊறவைத்து, மிளகாய், பெருங்காயம் போட்டு அரைத்து தோசை வார்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
தோசை மாவு புளித்துவிட்டால் அரைக்கப் மாவில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, நன்கு கலக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் தோசை முறுகலாகவும், ருசியாகவும் இருக்கும்.