மனநிலை, ஆற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த தினசரி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்கள் சமச்சீராக இல்லை என்றால் அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அவை சமமில்லாமல் போனால் உடல் இயக்கத்தையே பாதிக்கும்.
பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் சந்திக்கும் பல்வேறு விதமான குறைபாடுகளுக்கும் தைராய்டு சுரப்பிகள் ஒழுங்கின்றி சுரப்பதே காரணம் என்கிறார்கள் இத்தாலிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இனி, ஹார்மோன் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பார்க்கலாம்.
தவறான வாழ்க்கை முறைதான் உங்கள் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது. போதிய அளவு தண்ணீர், உணவு, சுகாதாரம் என அனைத்தும் எவ்வாறு அவசியமோ அதேபோல் நமது உடலில் ஹார்மோன்கள் நல்லமுறையில் சுரப்பதற்குத் தேவையான சில விஷங்களையும் நாம் செய்ய வேண்டும்.
தேவையான அளவு சூரிய ஒளி உடலுக்கு வேண்டும். ஹார்மோன் இம்பேலன்ஸ்க்கு முக்கியக் காரணம் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி3 இல்லாததுதான். இது உடலுக்குப் போதுமான அளவு சூரிய ஒளி கொடுக்காமல் இருந்தால் வரும் ஒரு நிலை. இதனை உணவுகள் மூலமாக சரி செய்யலாம். அதற்கு வைட்டமின் டி 3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது வைட்டமின் டி 3 சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, துத்தநாகம், மக்னீசியம், செலினியம், வைட்டமின் பி6 குறைபாடுகள் கூட ஹார்மோன் இம்பேலன்ஸுக்கு காரணமாக இருக்கலாம்.
தினமும் 5 நிறம் கொண்ட காய்கறிகளையும், பழங்களையும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான அளவு சக்தி கிடைக்கும் , அது உடல் இயக்கத்துக்குத் தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும். இதற்கு காய்கறிகளில் உள்ள ஃபைட்டோகெமிக்கல்கள் உதவுகிறது. சல்பர் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள ஹார்மோன் சுரப்பு பிரச்னை சரியாகும். இவை சிலுவை காய்கறிகளில் அதிகம் உள்ளது. உங்கள் உடலால் சொந்தமாக உருவாக்க முடியாத அமினோ அமிலங்களை புரதங்கள் வழங்குகின்றன. மேலும், சில ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் புரதம் தேவைப்படுகின்றன. இந்த சத்தின் அவசியத்தை உணர்ந்து, உணவில் தினமும், நட்ஸ், நெய், விதைகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். அது உடல் ஆரோக்கியமான ஹார்மோன்களை சுரக்க வழிவகுக்கும்.
தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும். அதோடு ஹார்மோன் இம்பேலன்ஸ் சரியாகும். தினமும் இரண்டு முறை ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வது உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து ஹார்மோன் சமநிலையில் இருக்க உதவும். சரியான அளவு ஆழ்ந்த தூக்கம் அவசியம். ஆழ்ந்த தூக்கத்தில்தான் ஹார்மோன் சரியான முறையில் சுரக்கும். ஹார்மோன்கள் இரவில்தான் அதிகம் சுரக்கின்றன. இரவு தாமதமாக நீங்கள் உணவு எடுத்துக்கொண்டால் அது உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது ஹார்மோன் உற்பத்தியையும் பாதிக்கிறது.
ஜங்க் உணவுgகளை தவிர்க்க வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளில் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் கெடுதலான வேதிப்பொருள்கள் அதிகளவில் கலந்துள்ளன என்கிறார்கள் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். காலை எழுந்தவுடனே முதல் உணவாக நீங்கள் காபி மற்றும் டீயை எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை அதிகளவில் இன்சுலினை சுரந்து, ஹார்மோன் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சரியான அளவு உறக்கம், சரியான நேரத்தில் சரியான உணவு, ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என இவற்றை பின்பற்றினாலே நம் உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சரியாக சுரந்து நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும் என்கிறார்கள்.