
வெளியே செல்லும்போது, சாலையோரங்களில் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் அந்த கருப்பு நிற நாவல் பழங்கள் நம்மை அறியாமலேயே ஈர்க்கும். அந்தப் பழத்தின் துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவைக்கு நாம் பலரும் அடிமை. ஆனால், பழத்தைச் சாப்பிட்டு முடித்தவுடன், அதன் கொட்டையை யோசிக்காமல் டக்கென்று தூக்கி குப்பையில் போட்டுவிடுவோம், இல்லையா?
ஆனால், நாம் சாதாரணமாகத் தூக்கி எறியும் அந்த சின்னஞ்சிறிய கொட்டைக்குள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் மருத்துவ சக்தி ஒளிந்திருக்கிறது.
நாவல் பழ கொட்டைக்குள் அப்படி என்னதான் இருக்கு?
நாவல் பழக் கொட்டையில் 'ஜாம்போலின்' மற்றும் 'ஜாம்போசின்' என்ற இரண்டு முக்கியமான மூலக்கூறுகள் உள்ளன. இவற்றின் முக்கிய வேலையே, நம் உடலில் மாவுச்சத்து, சர்க்கரையாக மாறும் வேகத்தைக் குறைப்பதுதான். நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும்போது, அதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்பட்டு கட்டத்தில் கலக்கிறது. இந்த கொட்டைப் பொடி, அந்த மாற்று வினையின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், சாப்பிட்ட உடனேயே சர்க்கரையின் அளவு திடீரென எகிறாமல், சீராகப் பராமரிக்கப்படுகிறது.
இந்த கொட்டைப் பொடியின் பலன் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை. இது கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டவும், உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், இது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் கூட உதவுகிறது.
இதை எப்படிப் பயன்படுத்துவது?
நாவல் பழக் கொட்டைகளை நன்றாகக் கழுவி, வெயிலில் உலர்த்தி, அதன் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் பச்சை நிறப் பருப்பை அரைத்தால், பொடி தயார். இப்படி வீட்டிலேயே தயாரிப்பது சிரமமாக இருந்தால், நாட்டு மருந்துக் கடைகளிலும், ஆன்லைனிலும் நாவல் கொட்டைப் பொடி சுலபமாகக் கிடைக்கிறது. தினமும் காலையில், ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இதன் துவர்ப்புச் சுவை அதிகமாகத் தெரிந்தால், மோரில் கலந்தும் குடிக்கலாம்.
நாம் அலட்சியமாகத் தூக்கி எறியும் ஒரு பொருளில் எவ்வளவு பெரிய மருத்துவ குணம் இருக்கிறது பார்த்தீர்களா? நாவல் பழத்தின் கொட்டைப் பொடி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு இயற்கையான, பக்க விளைவுகள் குறைந்த ஒரு சிறந்த உணவு.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)