
ஷின்ரின் யோகு (forest bathing) எனப்படும் ஜப்பானிய சிகிச்சை முறை வனப்பகுதியின் சூழலை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மனநிலையை சீராக்கி அதனை மேம்படுத்தவும் உதவுகின்ற சிகிச்சை முறை. 1980 களில் முதன் முதலாக ஜப்பான் நாட்டு அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. 'ஷின்ரின்' என்றால் காடு. 'யோகு' என்றால் குளியல்.
இது கடந்த 40 ஆண்டுகளாக உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள ஜப்பானிய நடைமுறையாகும். உலகில் காடுகள் நிறைந்த நாட்டில் ஜப்பானும் ஒன்றாகும். இங்கு ஏராளமான காடுகள் இருப்பதற்கான சரியான புவியியல் மற்றும் காலநிலை நிலைமைகள் உள்ளன.
ஜப்பானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 69% காடுகள் உள்ளன. பின்லாந்து, ஸ்வீடனுக்கு அடுத்து மூன்றாவதாக அதிக காடுகள் நிறைந்த நாடாக உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் வனக் குளியலை தீவிரமாக ஊக்குவிக்கிறது. இங்கு ஜப்பான் முழுவதும் 65க்கும் மேற்பட்ட வன சிகிச்சை மையங்கள் உள்ளன.
காடுகளின் காட்சிகள், ஒலிகள், வாசனைகளுடன் ஒன்றிக் கிடக்கும் இந்த சிகிச்சை முறை நோய் எதிர்ப்புக்கான உயிரணு செயல்பாட்டை அதிகரித்து புற்றுநோய் எதிர்ப்பு புரதங்களை வெளிப்படுத்த உதவுகிற ஒரு இயற்கை நடைமுறை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பலர் இயற்கையுடன் ஒன்றிய இந்த சிகிச்சை முறையால் பயனடைந்து வருகிறார்கள்.
வனக் குளியல் எனப்படும் காட்டுக் குளியல் ரத்த அழுத்தத்தை குறைக்கும். கார்டிசோல் அளவைக் (மன அழுத்த ஹார்மோன்) குறைக்கும். மனநிலையை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மரங்களால் வெளியிடப்படும் அத்தியாவசிய எண்ணெய்களான பைட்டான்சைடுகள், வைரஸ்கள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக உடலின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.
1982 ஆம் ஆண்டு ஜப்பானிய வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரலாக இருந்த டோமோஹிடே அகியாமாவால் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் முயற்சி பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாக மட்டுமல்லாமல், நவீன வாழ்க்கையின் சமகால சவால்களுக்கான ஒரு பிரதிபலிப்பாகவும் இருந்தது. 1980 களில் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் தொடர்பான நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இதற்கு ஜப்பானிய அரசாங்கம் இந்த எதிர்மறை விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைத் தேடி ஷின்ரின் யோகு என்ற யோசனையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது நகர்ப்புற வாசிகளிடையே மன அழுத்தத்தை குறைத்து நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
காட்டில் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிநபர்கள் இயற்கையுடன் இணைவது மன அழுத்தத்தைக் குறைத்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேல்ஸ் நாட்டு இளவரசி கேட், அதிலிருந்து மனரீதியாக மீட்க உதவிய ஃபாரஸ்ட் பாத்திங் என்கிற சிகிச்சை முறையை பற்றியும், அதன் குணப்படுத்தும் ஆற்றல் பற்றியும், அதனால் அவருக்கு ஏற்பட்ட நம்பகத்தன்மை குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
ஷின்ரின் யோகு என்பது மரங்கள் மற்றும் புற்களுக்கு மத்தியில் இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும், எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லாமல் மெதுவாக காட்டின் வழியாக நடந்து செல்வதன் மூலமும், சுற்றியுள்ள இயற்கையை உள்வாங்க நேரம் ஒதுக்குவதன் மூலமும் செய்யப்படுகிறது.
காட்டு ஒலிகளை கேட்பது அதாவது பறவைகள் மற்றும் பூச்சிகளின் ஒலிகளை கேட்பதும், செடிகள் மற்றும் மரங்களின் பூக்கள் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெய்களை முகர்ந்து பார்ப்பதும், சுற்றுப்புறங்களையும் காட்சிகளையும் கவனமுடன் 5 புலன்களையும் பயன்படுத்தி கவனிப்பதும் என சுற்றியுள்ள இயற்கையை உள்வாங்க நேரம் ஒதுக்குவதன் மூலம் செய்யப்படும் சிறந்த சிகிச்சையாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)