
நம்முடைய உணவு வகைகள் பலவற்றின் தயாரிப்பு கடாயில் ஊற்றப்படும் எண்ணெயிலிருந்தே ஆரம்பமாகும். ஆனால் ஜப்பானியர்களின் சமையல் தண்ணீர் அல்லது கடல் பாசி மற்றும் மஷ்ரூம் சேர்த்து தண்ணீரில் வேக வைத்த ப்ரோத்திலிருந்து ஆரம்பிக்கும். இந்த ஒரு வேறுபாடே பல வகை மாற்றங்களுக்கு வித்திடும்.
நம்மைப்போல் உணவுகளை ஜப்பானியர்கள் எண்ணெய்யில் தாளித்தோ அல்லது பொரித்தோ உண்பதில்லை. அதற்குப் பதில் மூலப் பொருட்களை தண்ணீரில் போட்டு சிறு தீயில் வைத்து கொதிக்க விடுகின்றனர் அல்லது ஆவியில் வேக வைத்து எடுக்கின்றனர். இதனால் உணவுகள் சுவையும் ஊட்டச் சத்துக்களும் குன்றாமலிருப்பதுடன் சுலபமாக ஜீரணமாகவும் செய்யும்.
பல வகையான உணவுகளும் சிறிய அளவில் இடம் பெறும் சரிவிகித உணவு முறையே ஜப்பானியர்களுக்கு ஆரோக்கியம் தருகிறது. இதற்கு பாரம்பரிய முறையில், நுட்பமான அறிவுடன் நேர்த்தியான உணவுகளை (மூலப்பொருட்களை) தேர்ந்தெடுக்கும் விதமே அவர்களின் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. ஜப்பானியர்கள் பின்பற்றும் சில முக்கியமான வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
ஜப்பானியர்கள் சாப்பிடும் தட்டில் சாதம், சமைத்த காய்கறி, கொஞ்சம் கிரில்டு ஃபிஷ், மிஸோ சூப், ஊறுகாய் போன்றவை குறைந்த அளவில் வைக்கப்பட்டிருக்கும். அதுவே நிறைந்த திருப்தி அளிக்கும்.
அவர்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மிஸோ, சோயா சாஸ், ஊறுகாய், நாட்டோ போன்ற நொதிக்கச் செய்த உணவுகள் சிறப்பான ஜீரணத்துக்கும், ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப் படவும் உதவும்.
அவர்கள் உணவில் ரெட் மீட் இருக்காது.
சால்மன், சர்டைன் மற்றும் மாக்கரேல் போன்ற மீன் வகைகளில் ஒன்று இடம் பிடிக்கும். இவற்றிலிருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
மீனை ஆவியில் வேக வைத்து அல்லது கொதி நீரில் போட்டு வேக வைத்து சாஸ் போன்ற எதையும் தொட்டுக்காமல், குறைந்த அளவில் உட்கொள்வர். இதனால் உடலில் அதிகப்படி கொழுப்போ உப்போ சேர வாய்ப்பில்லாமல் போகும்.
ஜப்பானியர்களின் உணவில் காய்கறிகள் அதிக இடம் பெறும். பல ரக காய்கறிகள், பச்சையாக, ஆவியில் வெந்தது, கொதி நீரில் போட்டு வேக வைத்தது, நொதிக்கச் செய்ததென பல விதங்களில் தயாரித்ததாக இருக்கும்.
எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொள்வது அவர்கள் வழக்கம்.
தரையில் பயிர் செய்யப்படும் காய்கறிகளில் இல்லாத கனிமச் சத்துக்கள் கடலுக்குள்ளிருந்து சேகரிக்கப்படும் ஸீ வீட் (Seaweed) களில் அதிகம் இருக்கும். இதுவும் அவர்கள் உணவில் தவறாமல் இடம் பெறும். ஆனால் ஸீ வீட்களில் கிரீம் பூசியோ அல்லது அவற்றை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தோ உட்கொள்ள மாட்டார்கள்.
உணவை கோப்பைகளில் நிரப்பி, சாப்ஸ்டிக் கொண்டு வாயிலிட்டு மெதுவாக மென்று சாப்பிடுவது அவர்கள் வழக்கம். ஒருபோதும் உணவை மெல்லாமல் விழுங்குவதில்லை. இதனால் உண்ணும் உணவின் சுவையை உணரவும், ஜீரண மண்டல செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறவும் உதவ முடியும்.
அவர்கள் உணவை சமைக்கும் முறை, உபயோகிக்கும் மூலப் பொருட்கள் மற்றும் உட்கொள்ளும் விதம் ஆகியவையே அவர்களின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகளாக உள்ளன.