
ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிராலஸ் ஆகியோர் எழுதிய இக்கிகை நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிகாட்டும் 10 ஜப்பானிய ரகசியங்கள். ‘Ikigai: The Japanese secret to long and happy life’ என்ற புத்தகத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியான, நீண்ட, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ தேவைப்படும் 10 ரகசியங்கள் பற்றி கூறியுள்ளார்கள்.
1. சுறுசுறுப்பாக இருங்கள், ஓய்வு பெறாதீர்கள்: அதிக முதியவர்கள் வசிக்கும் ஜப்பானில் உள்ள ஒகினோவாத் தீவில், மக்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து தோட்டக்கலை, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கற்பித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். தொடர்ச்சியான செயல்பாடு அவர்களின் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. விரும்புவதை சிறப்பாக செய்வதன் மூலம் சுயமதிப்பும் வாழ்வதின் நோக்கமும் நிறைவேறுகிறது.
2. நிதானம்: நவீன உலகம் பரபரப்பாகவும் அவசரமாகவும் செயல்படுவதை பெருமையாகக் கருதுகிறது. ஆனால், ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் கவனத்துடனும் பொறுமையாகவும் அனுபவிக்க வேண்டும். வேகத்தை குறைப்பதன் மூலம் வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும். இந்த நிதானம் வெகுவாக மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வயதாவதையும் நோய்கள் வருவதையும் தள்ளிப்போடும்.
3. முக்கால் வயிறு உணவு: முழுமையாக அல்லாமல் 80 சதவீதம் வரை வயிறை நிரப்பினால் போதும் என்பது ஜப்பானியக் கொள்கையாகும். அதிகமாக உண்டு உடலை அதிக சுமைக்கு ஆளாக்கக் கூடாது. இது குறைந்த ஆயுட்காலத்திற்கு வழிவகுக்கும். பசி எடுக்கும்போதும் குறைவாக சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். மேலும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்களையும் உண்ண வேண்டும்.
4. நல்ல நண்பர்கள்: கவலைகள், மகிழ்ச்சி போன்றவற்றை பகிர்ந்துகொள்ள ஆலோசனைகள் சொல்ல நண்பர்கள் அவசியம். அவர்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு ஆதரவான வலையமைப்பை வழங்குகிறார்கள். நட்பே சிறந்த மருந்து என்று இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் விவரிக்கிறார்கள்.
5. அடுத்த பிறந்த நாளுக்கு தயாராகுதல்: சரியான உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. நாள் முழுக்க அவ்வப்போது நடப்பது, தோட்ட வேலை செய்ய வேண்டும். உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்க்க வேண்டும். மேலும், மிதமான உடற்பயிற்சி மகிழ்ச்சியை உணர வைக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. நீண்ட காலத்திற்கு உடலைப் பராமரிக்க உதவுகிறது.
6. புன்னகை: புன்னகை என்பது ஒரு கண்ணியமான சைகை மட்டும் அல்ல, ஒரு வாழ்க்கை முறை மற்றும் நட்பு ரீதியான நடத்தை. நிறைய நண்பர்களை உருவாக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சிரமங்களை எதிர்கொண்டாலும் ஒரு நேர்மையான கண்ணோட்டமும் புன்னகையும் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.
7. இயற்கையோடு இணைதல்: மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானியர்கள் வனக்குளியல் என அழைக்கப்படும் இயற்கையில் அதிக நேரத்தை செலவிடும் சிகிச்சை நன்மைகளை இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள். மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியைத் தந்து சுற்றுச்சூழல் அமைப்போடு இணைந்திருப்பதை ஊக்குவிக்கிறது.
8. நன்றி சொல்லுதல்: நன்றி உணர்வு என்பது நமது நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த வழியாகும். அன்றாட வாழ்க்கையின் எளிய இன்பங்களுக்கு கூட நன்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அது மகிழ்ச்சியையும் திருப்தியான உணர்வையும் வளர்க்க உதவும்.
9. நிகழ்காலம்: கடந்த கால சிக்கல்களை எண்ணி கவலைப்படுவதும், எதிர்காலத்தை பற்றி அஞ்சுவதும் ஆபத்து. நிகழ்காலத்தில் வாழ்வது மிகவும் முக்கியம். நினைவாற்றலை பயிற்சி செய்வதன் மூலமும் ஒவ்வொரு பணியையும் மகிழ்ச்சியோடு செய்வதன் மூலமும் நிகழ்காலத்தில் வாழலாம். இது இக்கிகை தத்துவத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
10. இக்கிகையை பின்பற்றுங்கள்: நாம் உலகத்தை அல்லது பிறரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு பிடித்த ஏதாவது ஒரு இலக்கை கண்டுபிடித்து ஒவ்வொரு நாளும் அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். இந்த நோக்க உணர்வுதான் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.