கக்குவான் இருமலைப் போக்கும் மூலிகைகள்!

Kakkuvan Irumalai Pokkum Mooligaigal
Kakkuvan Irumalai Pokkum Mooligaigalhttps://urgentcareomaha.com

சில குழந்தைகள் நீண்ட நேரம் இருமலால் அவதிப்படுவார்கள். இழுத்து இழுத்து இருமுவார்கள். இது அவர்களுக்கு அதிக தொல்லை கொடுக்கும் நோய்களில் ஒன்று. இது ஒரு தொற்று. ஒரு குழந்தைக்கு வந்தால் மற்ற குழந்தைகளுக்கும் இதை எளிதில் வந்துவிடும். இந்த இருமலை உடனடியாக குணப்படுத்தி விட்டால் நல்லது. இல்லையேல் பசிக்காது. ஆதலால் சாப்பிட மாட்டார்கள். மலச்சிக்கல் ஏற்படும். இப்படி நீண்டுகொண்டே போகும். இதனால் குழந்தைகள் நோஞ்சான் போல் ஆகிவிடுவார்கள். அதற்கு நோய் கண்ட உடனே வைத்தியத்தை ஆரம்பித்து விட வேண்டும். அதற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகளை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஆடாதொடா: மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். நுரையீரல் நன்கு செயல்பட்டால்தான் இரத்தம் சுத்தம் அடையும். இது காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராண வாயுவை பிரித்து எடுத்துக்கொண்டு காரியமிள வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலை பலப்படுத்த ஆடாதொடா சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் அருகில் உள்ள கசடுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ஆடாதொடா தாவரத்தை, 'மரணம் மாற்றும் மூலிகை' என்றும் கூறுகின்றனர். கனிகள், மலர்கள், இலைகள் மற்றும் வேர் போன்றவை பூச்சிகளை அகற்றும். நுண் கிருமிகளை அகற்றும். வலியகற்றும். கபம் வெளியேற்றும்.

தீராத மார்புச் சளி, மூச்சுத் திணறல், இருமல், ஜலதோஷம், கக்குவான் இருமல்  ஆகியவற்றிற்கும் இது மருந்தாகிறது. கிராமப்புறத்தில் ஆடாதொடா இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப் பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு இந்த இலையை பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.

ஆடாதோடா இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சு சளியைப் போக்கி, உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சையம் அதிகமாக இருப்பதால் நெஞ்சு சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக் கட்டுப் போன்றவை நீங்கும். இதனை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதும் சளி தொல்லை உண்டாகாது. ஆடாதொடையை எந்த வடிவில் கொடுத்தாலும் சளி குறையும் என்பது உறுதி. அதனால்தான் சளி என்று வந்தாலே ஆடாதொடை பொடியையும் தூதுவளை பொடியையும் இரட்டை மூலிகைகளாகக் கூறுவது.

தூதுவளை: கக்குவான் நோய் கண்ட ஆரம்பத்திலேயே தூதுவளை இலை சாறு எடுத்து அதனுடன் பசு நெய் கலந்து, தூள் செய்த கோஷ்டம் சிறிதளவு சேர்த்து பதமாய் காய்ச்சி வைத்துக்கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டி தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கு இது மிகவும் சிறந்தது.

நெல்லி: நெல்லிக்காய் சூரணம் ஒன்றரை ஸ்பூன் காலை, மதியம், மாலை என பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
இந்த 10 குணங்களை விலக்கி விட்டால் வாழ்வே சொர்க்கமாகும்!
Kakkuvan Irumalai Pokkum Mooligaigal

நாயுருவி கதிர்: மஞ்சள், சியக்காய், நாயுருவி கதிர் ஆகிய மூன்றையும் சம அளவுகளில் எடுத்து சுத்தமான தண்ணீர் ஊற்றி மை போல் அரைத்து அதை ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இதுபோல் காய்ச்சி வடித்த குடிநீரை மூன்று பங்காக்கி அதில் வேளைக்கு 1 பங்கு வீதம் காலை, மதியம், இரவு கொடுத்து வர இருமல் சளி நீங்கும்.

துளசி: துளசி செடியின் பூங்கொத்து, சுக்கு, திப்பிலி, வசம்பு இவற்றை தனித்தனியே தூளாக்கி சலித்து சம அளவு கலந்து ஒரு சிட்டிகைத் தூளை சர்க்கரை சேர்த்து காலை, மாலை இரண்டு நாள் கொடுக்க வர சளி இருமல் பிரச்னை குணமாகும்.

மேலும், இதுபோன்ற மூலிகைகளை எடுத்துக்கொள்ளும்போது பக்கத்தில் இருக்கும் ஒரு சித்த மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொண்டால் இன்னும் சில கருத்துக்கள் தெளிவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com