இரத்தக்கட்டு பிரச்னைக்கு நிவாரணம் தரும் கரியபோளம்!

Aloe Vera kariya pavalam
Aloe Vera kariya pavalam
Published on

னிதனை இரத்தமும் சதையுமாகப் படைத்து கூடவே உடல் நல பாதிப்புகளையும் தந்த இறைவன், அந்த பாதிப்புகள் நீங்க இயற்கையின் கொடையாக அநேக மூலிகைகளையும் தந்துள்ளார். நம் நோய்களுக்கு ஏற்ற மூலிகைகளை கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி நலம் பெற வேண்டியது மட்டுமே நம் கடமை.

அந்த வகையில் நம் அன்றாட இயக்கங்களின்போது எதிர்பாராமல் வரும் சுளுக்கு, இரத்தக் கட்டு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல்கள், தசை வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது கரியபோளம் அல்லது மூசாம்பரம் என்றழைக்கப்படும் மூலிகை. இது நாம் வீடுகளில் சாதாரணமாக வளர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த ஆலுவேரா எனப்படும் சோற்றுக்கற்றாழையிலிருந்தே பெறப்படுகிறது.

சோற்றுக்கற்றாழையை நறுக்கும்போது வெளிவரும் ஒருவித மஞ்சள் நிற பால் போன்ற திரவத்தை நீக்கிய பின்னரே அந்த சதைப் பகுதியை பயன்படுத்துவது வழக்கம். மருத்துவ குணம் மிக்க இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து வெயிலில் நன்கு உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். பொதுவாக நன்கு முதிர்ச்சியடைந்த கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறப் பாலைக் கொண்டே இந்த கரியபோளம் தயாரிக்கப்படுகிறது. இது செக்கச்சிவந்த கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும் என்பதால் இதை கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கிறோம்.

அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் எளிதாக இது கிடைக்கும். இது உள்ளுக்கு எடுக்கும் மருந்தாகவும், வெளிப்புற பூச்சு மருந்தாகவும் என இரண்டு வகைகளில் கிடைக்கின்றது. அடிபட்ட வீக்கம், நரம்புப் பிறழ்வு, சுளுக்கு ஆகிய வெளி பாதிப்புகளுக்கு இந்த மூசாம்பரத்தை வெந்நீரில் கரைத்துக் குழம்புப் பக்குவத்தில் இளஞ்சூட்டில் பூசினால் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
இல்லறம் நல்லறமாக கணவர்களுக்கான சில யோசனைகள்!
Aloe Vera kariya pavalam

மிதமான தீயில் சிறிய அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு இந்த கரியபோளத்தை தண்ணீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான தீயில் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் சூடாக சூடாக இந்த கெட்டியாக உள்ள கரியபோளத்தை கிளறி விடவேண்டும். கரியபோளம் நன்றாகக் கரைந்து தண்ணீர் கெட்டியாக மாறும். அந்த நிலையில் இதை இறக்கி வைத்து ஆறியதும் அதில் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதமான சூட்டிற்கு வந்த பிறகு இந்த எண்ணெய்யை சிறிதளவு எடுத்து காயம், வீக்கம் உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். ஒரு நாளில் காலை, மதியம், இரவு என மூன்று வேளை இதை தேய்க்கலாம். குறைந்தது ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது பயன்படுத்தினால் நல்லது. மேலும், இதை எவ்வளவு நாட்கள் தடவ வேண்டும் என்பது அவரவர் பாதிப்பைப் பொறுத்து அமையும்.

இது பிசின் போன்றது என்பதால் இதைத் தடவிய பின் உடைகளிலோ வேறு இடங்களிலோ பட்டுக் கறை ஆகாமல் கவனமாக இருக்கவேண்டும். இரவு நேரத்தில் தடவினால் காலை வரை அப்படியே விட்டு தண்ணீரால் கழுவலாம். நீரில் எளிதாகக் கரையும் இது.  இரத்தக் கட்டு இருந்தால் தொடர்ந்து இதை போட்டால் படிப்படியாக அது குணமாகும். சரும வெடிப்பு, வெட்டு, தீக்காயம் உள்பட பல பாதிப்புகளுக்கு இது பயன்படுகின்றது. குறிப்பாக, நரை முடியை கருமையாக்கவும் அழகுக்கலையில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது என்றாலும், வெளிப்பூச்சாக மட்டுமே நாம் பயன்படுத்துவது நல்லது. உள் எடுக்கும் மருந்தை நிச்சயமாக நல்லதொரு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன்தான் எடுக்க வேண்டும்.

சாதாரண இரத்தக்கட்டுக்கு மருத்துவமனை சென்று ஆயிரக்கணக்கான ரூபாயை இழக்காமல், குறைந்த செலவில் இந்த கரியபோளத்தை பயன்படுத்தி நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com