மெக்சிகன் புதினா என அழைக்கப்படும் கற்பூரவள்ளி, நீண்ட காலமாகவே பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும். இது குறைந்த தண்ணீரில் வேகமாக வளரக்கூடிய ஒரு தாவரம். எனவே இந்தப் பதிவில் கற்பூரவள்ளி இலைகளின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சளி இருமலைத் தடுக்கும்: சளி, இருமல், நெஞ்செரிச்சல், தொண்டையில் புண் மற்றும் சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய கற்பூரவள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளை அப்படியே எடுத்து நீங்கள் சாப்பிட்டாலே போதும் அனைத்தும் சரியாகிவிடும். அல்லது இதைப் பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் பருகலாம். இந்த மூலிகையில் உள்ள மருத்துவ குணம் உங்கள் சுவாசப் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிடும்.
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது: இந்த மூலிகையில் உள்ள அஸ்கார்பிக் அமிலம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் இதில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மன அழுத்தத்தை போக்கும்: கற்பூரவள்ளியின் அறியப்படாத நன்மைகளில் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்கும் பண்பும் ஒன்றாகும். குறிப்பாக இதில் காணப்படும் சில அரிதான கரிம சேர்மங்கள், இயற்கையாகவே நமக்கு மயக்க உணர்வை ஏற்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபடச் செய்வதாக சொல்லப்படுகிறது. மேலும் இதை மாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலமாக, நமது தூக்கத்தைத் தூண்டிவிடும் என்கின்றனர்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்: கற்பூரவள்ளி வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கவும், நமது செரிமானத்தை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலமாக, செரிமான அமைப்பு மேம்பட்டு, பல்வேறு குடல் சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபட உதவுகிறது.
கிட்னியை பாதுகாக்கும்: இது சிறுநீரைத் தூண்டி, உடலில் உள்ள அதிகப்படியான உப்பு, கொழுப்பு மற்றும் நீரின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலமாக நம்முடைய சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
புற்றுநோயை தடுக்கும்: கற்பூரவள்ளி இலைகள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இது மார்பகப் புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதில், நேர்மறை விளைவுகளைக் காட்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூலிகையில் காணப்படும் ஆக்சிஜனேற்றத் திறன் மற்றும் ஒமேகா 6 காமாலினோலிக் அமிலங்கள், மார்பகப் புற்றுநோயின் தீவிரத்தைக் குறைப்பதில் பங்களிக்கிறது.
என்னதான் இந்த மூலிகை பல நன்மைகளைச் செய்தாலும், இதன் இலைகள் மற்றும் தண்டுகளில் காணப்படும் ஒருவகை முள் போன்ற அமைப்பு, சருமத்தில் பட்டால் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம். மேலும் இதில் உள்ள ரசாயனங்களும், சேர்மங்களும் சக்தி வாய்ந்தது என்பதால், கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.