மழைக்காலம் என்பது இயற்கையின் அழகான காட்சியை நமக்கு வழங்கும் காலமாகும். இந்த காலத்தில் நாம் புத்துணர்ச்சியுடன் இருப்போம். அதிக குளிர்ச்சி காரணமாக மழைக்காலங்களில் கீரை வகைகளை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆனால், எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய சில கீரை வகைகளும் உள்ளன. இந்தப் பதிவில் மழைக்காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய பல்வேறு வகையான கீரைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்:
பாலக் கீரை: பாலக் கீரை இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்தசோகை பிரச்சனையை தீர்க்க உதவும். எனவே, மழைக்காலங்களில் இந்த கீரையை தாராளமாக சாப்பிடலாம். பாலக் கீரையை சூப், பரோட்டா, தோசை, போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
கொத்தமல்லி: கொத்தமல்லி கீரையில் வைட்டமின் கே, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது உணவுக்கு நல்ல வாசனை மற்றும் சுவையைத் தரும். கொத்தமல்லியை சாம்பார், சட்னி, ரசம் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம், அல்லது தனியாக துவையல் செய்து சாப்பிடலாம்.
புதினா கீரை: புதினா செரிமானத்தை மேம்படுத்த உதவும். இது வாயு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது. புதினாவைப் பயன்படுத்தி ஜூஸ், சட்னி, துவையல் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
மேதி: மேதி கீரை உடல் வெப்பத்தை குறைக்க உதவும். இது தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்தக் கீரையை பயன்படுத்தி சாம்பார் ரசம் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
மழைக்காலங்களில் கீரைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
மழைக்காலங்களில் கீரைகள் சாப்பிடுவது நம் உடலுக்கு பலவகையான நன்மைகளைத் தருகின்றன. அவற்றின் சில முக்கியமான நன்மைகள் என்று பார்க்கும்போது, இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவற்றில் நிறைந்துள்ள விட்டமின்கள், தாதுக்கள் போன்றவை, நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
கீரைகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நம் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும், இது ரத்தத்தை சுத்திகரித்து, நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. நீங்கள் கீரைகளை அதிகமாக சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்கலாம். இவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாகும்.
இத்தகைய கீரைகளை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். எனவே, மேலே குறிப்பிட்ட கீரைகளை மழைக்காலங்களில் தாராளமாக உணவில் சேர்த்துக்கொண்டு, அவற்றின் நன்மைகளைப் பெறுங்கள்.