மௌனமாகக் கொல்லும் சிறுநீரக நோய்: உங்கள் உடல் சொல்லும் ரகசிய எச்சரிக்கை!

Urinary infection
Urinary infection
Published on

சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்மணிகள் வரை தற்போது அதிகம் பேர் பாதிக்கப்படுவது யூரினரி இன்பெக்ஷன் (Urinary infection) எனப்படும் சிறுநீர் தொற்று பிரச்னையால் தான். பெண்களில் சுமார் 50 முதல் 60 சதவிகிதம் பேர் நிச்சயம் இந்த சிறுநீர் தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவர்களாகவே இருப்பார்கள்.

சிறுநீர் தொற்று என்பது, சிறுநீரில் குறிப்பிட்ட பாக்டீரியாவின் அளவு அதிகரித்து காணப்படுவதையே சிறுநீர் பாதை தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, பெண்களின் சிறுநீர்க் குழாய் சிறியதாக இருப்பதாலும், சிறுநீர் வெளியேறும் இடம், வெஜைனா மற்றும் ஆசனவாய் ஆகிய மூன்றும் அருகருகில் இருப்பதாலும் இந்தப் பிரச்னை பெண்களை அதிகம் பாதிக்கின்றது.

வேலை பளுவினால் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் விடுவது மற்றும் வெளியிடங்களில் பொதுக்கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துவது மேலும் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பது குறைவது போன்றவை சிறுநீர் தொற்று பிரச்னைக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஒருவருக்கு சிறுநீர் தொற்று (யூரினரி இன்ஃபெக்ஷன்) இருக்கிறது என்பதை சிறுநீர் பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். இருப்பினும், அதற்கு முன் கீழ்க்காணும் அறிகுறிகள் மூலம் ஒருவருக்கு சிறுநீர் தொற்று பிரச்னை உள்ளதா என்பதை நாமே தீர்மானிக்கலாம்.

சிறுநீர் கழிக்கும்போது கடும் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடி வயிற்றில் சுருக் சுருக்கென வலி , அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு, சிறுநீர் கழித்த பின்பும் முழுமையாக சிறுநீர் வெளியேறாதது போன்ற உணர்வு, விட்டு விட்டு வரும் சிறுநீர், சிறுநீரின் நிறம் மாறிப் போய் இருப்பது, காய்ச்சலுடன் குளிரும் இருப்பது போன்ற அறிகுறிகளால் யூரினரி இன்ஃபெக்ஷன் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுநீர் தொற்று சம்மரில் ஆபத்து!முன்னெச்சரிக்கையுடன் இருப்பது, நமக்கு பாதுகாப்பு
Urinary infection

இந்தப் பிரச்னைகளை நம்மால் நிச்சயம் தாங்க முடியாது. ஓரிரு நாட்களுக்கு மேல் காத்திருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிறுநீர் பரிசோதனை செய்து உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லதாகும். ஆனால், இதை அலட்சியப்படுத்தி  நாட்களைக் கடத்தினால் தொற்று தீவிரமாகி பல உறுப்புகளையும் பாதிக்கும் சூழல் உருவாகும்.

சிறுநீரில் காணப்படும் பாக்டீரியா இரத்தத்தில் கலந்து விட்டால் பெரும் பாதிப்புகளை உருவாக்கலாம். ஆகவே, ஆரம்ப நிலையிலேயே சிறுநீர் தொற்றை அலட்சியம் செய்யாமல் தகுந்த மருத்துவரை அணுகி மருந்துகளிலேயே குணமாக்கி விடுவதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

- சேலம் சுபா

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com