
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் என்னென்ன சத்து இருக்கிறது. அதனால் விளையும் மருத்துவ பயன்கள் என்ன ? சில பருப்புகளை சாப்பிடுவதால் சத்து இருக்கிறதா? இல்லை வெறும் சுவைக்காக மட்டும் தான் சாப்பிடுகிறோமா? என்பதை தெரிந்து கொள்வதற்கான குறிப்புகள் இதோ:
பாசிப்பருப்பு : 'பயிறு பத்தியத்திற்கு' என்பது பழமொழி. பருப்பு வகைகளில் உயர்ந்தது பாசிப்பருப்பு. இதை கொண்டு கஞ்சி, பொங்கல், கிச்சடி மற்றும் பணியாரம், அல்வா போன்ற இனிப்பு வகைகள், பக்கோடா போன்ற கார வகைகள் அனைத்தும் செய்து உண்ணலாம். பித்த நோய்கள் தீருவதுடன் மலச்சிக்கல் நீங்கும்.
துவரம் பருப்பு : இதை உணவுடன் சேர்த்துக்கொள்ள இரைப்பை, குடலுக்கு பலம் கொடுக்கும். எல்லா நோயாளிகளும் பத்திய உணவாக தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
உளுத்தம் பருப்பு : இதை உணவில் சேர்த்து வர இடுப்பு வலி நீங்கும். க்ஷயரோக நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இதனால் செய்த பலகாரங்களை உண்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
மைசூர் பருப்பு: துவரம் பருப்பிற்கு பதிலாக இதனை சிலர் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இதில் எந்த சத்தும் இல்லை. இது வாயுவை அதிகரிக்க செய்யும் பண்புடையது.
கொள்ளு: கொள்ளை வேகவைத்து வடித்தெடுத்த நீரில் ரசம் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர தேகத்தில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை உடையது.
சோயா பீன்ஸ்: புரதச்சத்து அதிகமுடைய தானியம் சோயா பீன்ஸ். ஆதலால் ஒன்பது பங்கு கோதுமைக்கு ஒரு பங்கு சோயா என்ற விகிதத்திலும், இட்லி தோசை போன்ற வற்றுடன் சிறிதளவும், கஞ்சி மாவில் சிறிதளவும், சேர்த்து அரைத்தாலே போதுமான சத்து கிடைத்துவிடும். இதில் பால், முட்டை, மாமிசத்திற்கு இணையான சத்து உள்ளது என்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி அதிகமாக சாப்பிடும் பொழுது சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் கவனமுடன் கையாள வேண்டும்.
கடலைப்பருப்பு: இது நுரையீரலுக்கு பலம் கொடுக்கும். மூல ரோகிகளுக்கு ஆகாது. இதற்கு வயிறு நொந்து மலத்தை தள்ளும் குணம் உண்டு. பொதுவாக பத்தியத்திற்கு உதவாதது.
நிலக்கடலை : இதில் புரதம் அதிகம் உள்ளது. இதில் கொழுப்பு சத்தும் அதிகம் உள்ளது. ஆட்டுப்பாலுடன் வறுத்த நிலக்கடலை சேர்த்து சாப்பிட தேக பலம் பெருகும். பல் வளர்ச்சிக்கு உதவும். அதிகம் சாப்பிட்டால் காமாலை, இரைப்பை அலர்ஜி, செரிமான கோளாறு, இதய எரிச்சல் ஏற்படும்.
பாதாம் பருப்பு : தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். தேகம் பெருக்கும். பலத்தை கொடுக்கும் . காய்ச்சிய பாலில் பாதாம் தூளை ஒரு டீஸ்பூன் போட்டு குடித்து வர மூளை, கண் முதலிய வற்றிற்கு பலம் கொடுக்கும். தாதுவிருத்தி ஆகும். மலச்சிக்கல் நீங்கும். கொப்பரை தேங்காய், கசகசா, உடன் அரைத்து பசும்பாலுடன் காய்ச்சி அருந்த வயிற்றுப்புண் குணமாகும்.
பிஸ்தா: இருதயத்திற்கும் இரைப்பைக்கும் பலத்தைத் தரும். குழந்தைப் பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை உண்டாக்கும்.
சாரப்பருப்பு: இதை கற்கண்டுடன் சேர்த்து உண்ண கடுமையான நீர் சுருக்கு, நீர் எரிச்சல் தீரும். உயிர் சக்தியை அளிக்கும். வெப்பம் தணியும்.