காபி மற்றும் டீ வகைகளை ஃபிளேவர் மற்றும் வாசனைக்காக அவற்றுடன் பல வகை மூலிகைகள் சேர்த்து தயாரித்து அருந்தி வருவது பரவலாக எல்லா இடங்களிலும் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. அதில் மற்றொரு வகையாக சமீபத்தில் சில்லி டீ அறிமுகமாகியுள்ளது. இது வழக்கமான அமைதியான குணம் கொண்ட சாதாரண டீயுடன் சேரும்போது ஒரு தனித்துவமான அதிக சக்தி அளிக்கக் கூடிய ஓர் உக்கிரமான பானமாக உருவெடுக்கிறது. இதன் மாறுபட்ட சுவை மற்றும் இதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலர் இதை விரும்பி ருசிக்க ஆரம்பித்துள்ளனர்.
பாரம்பரிய பிளாக் அல்லது க்ரீன் டீயுடன் ஃபிரஷ் அல்லது உலர்ந்த மிளகாய்களை சேர்த்து, வழக்கமான இஞ்சி, ஏலக்காய் மற்றும் பட்டை போன்ற ஸ்பைஸஸ்களில் ஒன்றை வாசனைக்காக சேர்த்து டீ தயாரிக்கையில் சூடான காரசார சுவையுடன் ஓர் அற்புதமான டீ கிடைக்கிறது. இந்த டீயை குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வலி குறைய உதவும்: மிளகாய்க்கு காரசாரமான சுவையைத் தருவது அதில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப்பொருளாகும். இது உடலில் வலிகளைக் குறைக்க சிறந்த முறையில் உதவக்கூடிய ஒரு பொருள் எனக் கூறப்படுகிறது. இதை மேற்பூச்சாக குறைந்த அளவில் சேர்க்கும்போது உடலின் வலியை உணரும் திறன் குறைகிறது.
இதனால் ஆர்த்ரைடிஸ் மற்றும் தசையில் கோளாறு உண்டானதால் வரும் நாள்பட்ட வலிகளால் துன்புறுவோர்களுக்கு இது நல்ல நிவாரணம் அளிக்க உதவும். கேப்சைசினின் தலையீட்டால் வலிகளை உணர மூளைக்கு அனுப்பப்படும் சிக்னல் செயலிழந்து, பாதிக்கப்பட்டவர்கள் வலியின்றி நடமாட முடிகிறது.
2. செரிமானத்தை சிறப்பாக்க உதவும்: மிளகாயில் உள்ள கேப்சைசின் ஜீரணத்துக்கு உதவும் என்சைம்கள் மற்றும் உமிழ் நீரின் உற்பத்தியை ஊக்குவித்து, ஜீரணம் சிறப்பாக நடைபெறவும், ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படவும் உதவி புரிகிறது. இதனால் வயிற்றில் வீக்கம், அஜீரணம் போன்ற கோளாறுகள் உண்டாவதில்லை. மேலும், மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பில்லை. சில்லி டீயை அளவோடு அருந்தும்போது ஒட்டுமொத்த குடல் இயக்கங்களும் மேன்மை பெறுகின்றன.
3. மெட்டபாலிச ரேட் உயரும்: மிளகாயில் உள்ள கேப்சைசின் உடலில் உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் தெர்மோஜெனஸிஸ் என்ற செயல்பாட்டை ஊக்குவித்து மெட்டபாலிச ரேட் உயரவும், அதிகளவு கலோரி எரிக்கப்படவும் உதவி புரியும். இதனால் உடலின் அதிகளவு எடை குறைந்து சம நிலையில் வைத்துப் பராமரிக்க முடிகிறது. இந்த சில்லி டீயை அருந்தும்போது அதன் முழு பலனையும் பெற சரிவிகித உணவை உட்கொள்வதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.
4. வீக்கங்கள் குறைய உதவும்: மிளகாய்க்கு சூட்டைக் கொடுப்பது கேப்சைசின் என்ற ஸ்பைசி இராசாயனப் பொருளாகும். இது சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. நம் உடலில் வீக்கங்களை உண்டாகச் செய்வது உடலில் உற்பத்தியாகும் சைட்டோகின்ஸ் (Cytokines) மற்றும் ப்ரோஸ்ட்டகிளான்டின் (Prostaglandin) என்ற பொருட்களாகும். கேப்சைசின் இப்பொருட்களின் உற்பத்தியைத் தடுத்து நிறுத்தி, வீக்கங்கள் உண்டாவதைத் தடை செய்ய உதவுகிறது. இதனால் ஆர்த்ரைடிஸ், குடல் வியாதிகள், சரும நோய்கள் உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகள் உண்டாகாமல் உடலைப் பாதுகாக்க முடிகிறது. கேப்சைசின் திசுக்களின் சீரமைப்பிற்கும், வலிகள் மற்றும் வீக்கங்களைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
5. மனநிலை (Mood) மகிழ்வுற உதவும்: இயற்கை முறையில் உடல் வலி குறையவும் மனநிலை மகிழ்வுறவும் உதவக்கூடிய என்டார்ஃபின் என்ற ஹார்மோனின் உற்பத்தி அளவை உயர்த்தவும் கேப்சைசின் உதவுகிறது. இதனால் உடலின் ஸ்ட்ரெஸ், மன அழுத்தம், மன வருத்தம் போன்றவை குறைந்து மனதிற்குள் சந்தோஷமும் உற்சாகமும் பெருக கேப்சைசின் காரணியாகிறது. ஒரு கப் சில்லி டீ சோர்வை நீக்கவும், மனம் மகிழ்ச்சியடையவும், நேர்மறை எண்ணங்களோடு கடமையாற்றவும் உதவி புரிகிறது.
இந்த சில்லி டீயை ஒரு நாளைக்கு ஒரு கப் என்ற அளவில் குறைவாக எடுத்துக் கொள்வதே ஆரோக்கியம்.