மெக்னீசியம் மனித உடலில் எலும்பு வலிமை, இதய ஆரோக்கியம் மற்றும் சரியான தசை செயல்பாடு ஆகியவற்றை பராமரிக்கத் தேவையான ஒரு முக்கியமான கனிமம் ஆகும். மெக்னீசியம் குறைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ், நீரிழிவு, ஒற்றைத் தலைவலி மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பதிவில் மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் பற்றிப் பார்ப்போம்.
மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:
தசைப்பிடிப்பு: ஒருவருக்கு உடலில் மெக்னீசியம் குறைவான அளவில் இருந்தால் அவருக்கு அடிக்கடி உடலில் தசைப்பிடிப்பு ஏற்படும். மெக்னீசியம் தசைகளின் சுருக்கத்தையும் தளர்வையும் கட்டுப்படுத்துகிறது. புரதத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் தசைகளை வலிமையாக்குகிறது. ஆனால், மெக்னீசியம் குறையும் போது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர் குலைத்து விடுகிறது. அதனால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும்.
பலவீனம் மற்றும் சோர்வு: உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் ஆற்றலுக்கும் மெக்னீசியம் மிகவும் முக்கியமானது. உடல் தேவையான அளவு மெக்னீசியம் உற்பத்தி செய்யவில்லையானால், உடல் சோர்வும் பலவீனமும் அடைகிறது.
உயர் இரத்த அழுத்தம்: இது மெக்னீசியம் பற்றாக்குறையின் அறிகுறிகளில் ஒன்றாகும். குறைந்த அளவு மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ்: இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கிறது. மெக்னீசியம் குறைபாடு இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது. பலவீனமான எலும்புகளை ஏற்படுத்துகிறது. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உடலில் மெக்னீசியம் அளவு குறையும்போது வென்ட்ரிக்கிள் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. இது ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்துகிறது. மார்பு வலி, மூச்சுத்திணறல், தலை சுற்றல் போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும்.
தூக்கக் கோளாறுகள்: உடலில் போதுமான அளவு மெக்னீசியம் இல்லாதபோது தூக்க - விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோனையும் சீர்குலைக்கிறது. நரம்பு செயல்பாடு சரியாக நடைபெறாததால் மூளை மற்றும் உடலைத் தளர்த்துவது பாதிக்கப்படுகிறது.
தலைவலி, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் பொதுவான மெக்னீசியம் குறைபாடு அறிகுறிகள் ஆகும். அதனால்தான் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
மனச்சோர்வு: மெக்னீசியம் மூளையின் மனநிலையை உறுதிப்படுத்துவதற்கும் அமைதியான செயல்பாட்டிற்கும் பொறுப்பு வகிக்கிறது. மெக்னீசியம் குறையும்போது அது மூளையை பாதித்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைத் தருகிறது.
மலச்சிக்கல்: மெக்னீசியம் ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி குடலில் உள்ள தண்ணீரை வெளியேற்றுகிறது. ஆனால், மெக்னீசியம் குறையும் போது இது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
கால்கள் மற்றும் கைகளில் உணர்வின்மை: குறைந்த அளவு மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் அளவை பராமரிப்பதில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. எனவே, இது கை கால்களில் கூச்சம் அல்லது உணர்வின்மைக்கு வித்திடுகிறது.
மாதவிடாய் பிடிப்புகள்: பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள். உடல் வலி போன்றவை மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகளே.
மெக்னீசியம் உள்ள உணவு வகைகள்: பூசணி விதைகள், கீரைகள், முழு தானியங்கள், கோதுமை, சோயா பால், கருப்பு பீன்ஸ், டார்க் சாக்லேட், கொட்டைகள், பாதாம், முந்திரி, ஆளி விதைகள், பழுப்பு, அரிசி, ஓட்ஸ், முழு தானிய ரொட்டி, கொண்டைக்கடலை, பயிறு, சோயா பீன்ஸ், சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன், வாழைப்பழம், வெண்ணெய் போன்றவற்றில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
மேலும், போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிக அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இவை உடல் மெக்னீசியம் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும். யோகா, தியானம், நினைவாற்றல் பயிற்சிகள் போன்றவை மனப் பதற்றத்தைத் தடுக்க உதவும். உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம்.