ADHD (Attention deficit hyperactivity disorder) என்பது தொடர்ச்சியான கவனமின்மை, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோய் ஆகும். கவனமின்மை, அதிவேகமாக செயல்படுதல் மற்றும் பேசுதல், சிந்திக்காமல் மற்றும் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கோளாறு. சமீபத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் பஹத் பாசில் ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று செய்திகள் வெளி வந்தன. ADHDயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஏ.டி.ஹெச்.டியின் அறிகுறிகள்: ஏ.டி.ஹெச்.டி குழந்தைகளை பாதிக்கும் ஒரு நோய் என்றாலும், பல பெரியவர்களுக்கும் இதன் பாதிப்பு உள்ளது. இது ஒரு தனி நபரின் சமூக உறவுகள் மற்றும் அவருடைய பணி, செயல்திறன் ஆகியவற்றிற்கு இடையூறு விளைவிக்கும்.
இவர்கள் மூன்று விதமான கோளாறுகளை அனுபவிக்கிறார்கள். அவை: 1. கவனக்குறைவு நிலை, 2.அதிக ஆற்றலுடன் செயல்படுவது,அதிகமாகப் பேசும் அதிவேகத்தன்மை, 3. சிந்திக்காமல், சுயகட்டுப்பாடு இல்லாமல் மனதில் தோன்றியவற்றையெல்லாம் பேசுதலும் செய்தலும். சிலருக்கு முதலாவது நிலையின் அறிகுறிகள் மட்டும் இருக்கும். இன்னும் சிலருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையின் பாதிப்பு இருக்கும்.
கவனக்குறைவின் அறிகுறிகள்:
1. ஏ.டி.ஹெச்.டி பாதிப்பு உள்ளவர்களால் உன்னிப்பாக எதிலும் கவனம் செலுத்த முடியாது. தனது பணியிடத்தில் கவனக் குறைவாக நிறைய தவறுகளை செய்வார்கள். அறிக்கைகளை தயாரித்தல். படிவங்களை பூர்த்தி செய்தல் அல்லது ஆவணங்களை மதிப்பு செய்தல் போன்ற முக்கியமான பணிகளுக்கு கவனம் செலுத்தி அவர்களால் தனது பணியை செம்மையாக செய்ய முடியாது
2. பிறர் பேசும்போது முகம் பார்த்து பேச்சை கூர்ந்து கவனிக்க அவர்களால் முடியாது.
3. பணியிடத்தில் தரப்படும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனது கடமைகளை சரியாக செய்து முடிக்க முடியாது. சரியான நேரத்தில் பணிக்கு வர முடியாத நேர ஒழுங்கின்மை இருக்கும்.
4. மறதி அதிகமாக இருக்கும். வண்டிச்சாவி, வீட்டு சாவி, பணப்பைகள், பர்ஸ், கைபேசி போன்றவற்றை எங்கே வைத்தோம் என்று நினைவில் வராமல் போவது, பில்களை சரியான நேரத்தில் செலுத்த மறப்பது, ஒருவரை சந்திக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு மறந்து போதல்.
5. மனதில் தோன்றும் தொடர்பில்லாத எண்ணங்கள் இவர்களை அலைக்கழிப்பதால் மிக எளிதாக இவர்கள் திசை திருப்பப்படுவார்கள்.
அதிவேகத்தன்மை: இவர்களால் ஒரு இடத்தில் நீண்ட நேரம் அசையாமல் உட்காருவது மிகவும் சிரமம். பள்ளியிலோ, பணியிடத்திலோ குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஓரிடத்தில் உட்காராமல் அடிக்கடி எழுந்துகொண்டே இருப்பது ஏடிஹெச் டியின் அறிகுறியாகும். அதீத அமைதியின்மையை அனுபவிப்பார்கள். கைகள் அல்லது கால்களால் அடிக்கடி இருக்கையை தட்டுவது, ஓசைப்படுத்துவது என்று பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்து கொள்வார்கள். வகுப்பில் நடக்கும் பாடம், பணியிடத்தில் மீட்டிங்கின்போது இவர்களால் முழுமையாக கவனிக்க முடியாது. தேவையில்லாமல் மிக அதிகமாக பேசுவார்கள். கேள்விகள் கேட்டு முடிக்கப்படும் முன்பே மிக வேகமாக பதில் அளிப்பார்கள்.
சிந்திக்காமல் செயல்படுதல்: நீண்ட வரிசையில் பிறர் காத்திருக்கும்போது பொறுமையின்றி இடையில் புகுந்து முன்னால் செல்லத் துடிப்பார்கள். பிறருடைய பணி மற்றும் செயல்பாடுகளில் குறிக்கிட்டு தொந்தரவு தருவார்கள்.
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை என `மூட் ஸ்விங்' இவர்களுக்கு ஏற்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாயல் மனதிற்கு தோன்றியபடி நடந்துகொளவார்கள்.
சிகிச்சை முறைகள்: ஏ.டி.ஹெச்.டி க்கு சிகிச்சைகளாக பொதுவாக நடத்தை- உளவியல் மற்றும் மருந்து சிகிச்சைகள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களுக்கேற்ப மருத்துவர் மருந்து, மாத்திரைகள் தருவார்.
உளவியல் சிகிச்சை: மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளைக் கொடுத்து அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயலையும் பாராட்டவேண்டியது அவசியம். ஒழுங்குமுறைகளை போதிக்க வேண்டியதும் அவசியம். குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் இவர்களை முறையாக கையாளலாம்.